வேறொருவர் மூலம் கர்ப்பம்; ஏற்காவிட்டால் கொலை: கணவரை மிரட்டிய மனைவி

2

மஹராஜ்கஞ்ச்: உத்தர பிரதேசத்தில், வேறொருவரால் கர்ப்பமானதை ஒப்புக்கொண்ட பெண், தன்னையும், பிறக்கப்போகும் குழந்தையையும் ஏற்காவிட்டால் கொலை செய்து விடுவதாகவும், போலீசில் வரதட்சணை கொடுமை புகார் அளிப்பதாகவும் கணவரை மிரட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உ.பி.,யின் மஹராஜ்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த நபருக்கு, 2022-ல் திருமணம் நடந்தது. அவரது மனைவி, சந்த் கபீர் நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். திருமணமானதில் இருந்தே கணவரை நெருங்க விடாமல், மனைவி தவிர்த்து வந்துள்ளார்.

இருவருக்கும் உடல் ரீதியான உறவு இல்லை என, குடும்பத்தினரிடம் கணவர் புலம்பி தவித்துள்ளார். இதனால், தகராறு ஏற்பட்டு, அடிக்கடி தாய் வீட்டுக்கு மனைவி சென்று விடுவது வழக்கம்.

அதுபோல, கடந்தாண்டு நவம்பரில் தாய் வீட்டுக்குச் சென்ற மனைவி, திரும்பி வரவில்லை. கணவர் நேரில் சென்று, வீட்டுக்கு வருமாறு அழைத்தபோது, ஏப்ரலில் வருவதாக மனைவி கூறினார்.

அதன்படி, திரும்பி வந்த மனைவிக்கு தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்டதால், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, கணவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பரிசோதனையில் மனைவி 14 வார கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் கூறினர்.

'என்னது கர்ப்பமா?' என 'ஷாக்'கான கணவர், நம்ப முடியாமல் வேறு சில மருத்துவ மனைகளுக்கும் அழைத்துச் சென்றபோது, அங்கும் கர்ப்பம் உறுதியானது.

ஆவேசமடைந்த கணவர், மனைவியிடம் விசாரித்தபோது, தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தகராறு முற்றியபோது, 'ஆமாம், வேறு ஒருவரால் தான் கர்ப்பமாக இருக்கிறேன்.

'அதற்கென்ன? என்னையும் பிறக்கப்போகும் குழந்தையையும் ஏற்காவிட்டால், உன்னை கொன்று விடுவேன். வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக போலீசில் புகார் அளிப்பேன்' என மனைவி கூறியதால், கணவர் கடும் அதிர்ச்சியடைந்தார்.

மஹராஜ்கஞ்ச் போலீஸ் ஸ்டேசனில், அவர் அளித்த புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

'பாலின சமத்துவ சட்டம் கொண்டு வருவதற்கான நேரம் இது. 'தலைவிதி இதுதான் என சமாதானமாகி மனைவியையும் குழந்தையையும் ஏற்பதைத் தவிர, அவருக்கு நம் நாட்டு சட்டப்படி வேறு வழியில்லை' என, சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement