1ம் வகுப்பு மாணவர்களின் டைரி குறிப்பு புத்தகமாகிறது

திருவனந்தபுரம்: கேரளாவில், ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் டைரியில் எழுதிய குறிப்புகளை தொகுத்து புத்தகமாக வெளியிட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, பள்ளி மாணவர்களிடையே டைரியில் எழுதும் பழக்கத்தை, மாநில கல்வித் துறை அறிமுகப்படுத்தி உள்ளது. இது, துவக்க கல்வியின் பாடத்திட்டத்தில் ஒரு பாடமாகவே உள்ளது.

அதன்படி, கேரளாவில் உள்ள அரசு பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்களின் அறிவுறுத்தலின்படி நாள்தோறும் தங்களது நினைவுகளை டைரியில் எழுதுகின்றனர். ஒரு சில மாணவர்கள் தங்களது நினைவுகளை வரையவும் செய்கின்றனர்.

'பக்கத்து வீட்டு முற்றத்தில், புளிய மரத்தின் மேல் ஒரு மஞ்சள் பறவை அமர்ந்திருப்பதை கண்டேன்' என, கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்றாம் வகுப்பு மாணவன் அர்ஷிக் டைரியில் எழுதினான்; மேலும், குறிப்புக்கு கீழே புளிய மரத்தையும், பறவையையும் வரைந்தான். இது போல ஏராளமான மாணவர்கள் தங்களது டைரியை பராமரித்து வருகின்றனர்.இந்நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் டைரி குறிப்புகளை தொகுத்து, புத்தகமாக வெளியிட கேரள கல்வித் துறை முடிவு செய்துள்ளது. 'குறுங்கெழுத்துகள்' என பெயரிடப்பட்டுள்ள இந்த புத்தகத்தை, ஏப். 23ல் முதல்வர் பினராயி விஜயன் வெளியிடுகிறார்.

இந்த புத்தகத்தை, மாநில கல்வி அமைச்சர் சிவன்குட்டி தொகுத்து, ஆசிரியர் குறிப்பு எழுதி உள்ளார். 96 பக்கங்கள் அடங்கிய இந்த புத்தகத்தில், பல்வேறு அரசு பள்ளிகளைச் சேர்ந்த ஒன்றாம் வகுப்பு ஆசிரியர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளும் உள்ளன.

Advertisement