டில்லியில் சிறுவன் கொலை வழக்கில் பெண் தாதா உட்பட 4 பேர் கைது

புதுடில்லி: டில்லியில், 17 வயது சிறுவனை கத்தியால் குத்திக் கொலை செய்த வழக்கில், பெண் தாதா உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
வடகிழக்கு டில்லி சீலம்பூரில் வசித்த குணால் சிங்,17, கடந்த 16ம் தேதி இரவு 7:30 மணிக்கு, பால் வாங்க கடைக்குச் சென்றார். வழிமறித்த சிலர் குணாலை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு ஓடினர்.
ரத்தம் சொட்டச் சொட்ட அந்தப் பகுதியில் இருந்த மருத்துவமனைக்குள் புகுந்தார். அங்கு அவருக்கு முதலுதவி செய்து, இ-ரிக்ஷாவில் ஜே.பி.சி. மருத்துவமனைக்குஅழைத்துச் சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் குணால் ஏற்கனவே மரணம் அடைந்து விட்டதை உறுதி செய்தனர்.
இதையடுத்து, சீலம்பூரில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. போலீஸ் மற்றும் துணை ராணுவப் படையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.
கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தீவிர தேடுதல் வேட்டை நடத்திய தனிப்படையினர்,பெண் தாதா ஜிக்ரா, அவரது உறவினர்கள் சாஹில் கான் மற்றும் ரிஹான் மிர்சா மற்றும் ஒருவர் என நான்கு பேரை கைது செய்தனர்.
குணால் வீட்டருகே வாடகை வீட்டில் வசிக்கும் ஜிக்ரா, சமூக ஊடகங்களில் துப்பாக்கியுடன் சமீபத்தில் 'வீடியோ' வெளியிட்டார். ஆயுதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். சில நாட்களுக்கு முன் ஜாமினில் வந்தார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹாஷிம் பாபா மனைவி சோயா என்பவருக்கு பவுன்சராக ஜிக்ரா வேலை செய்து வந்தார்.
குணாலின் சமூகத்தைச் சேர்ந்த சிலர், ஜிக்ராவின் உறவினரான சாஹிலைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அதற்கு பழிவாங்கவே குணால் கொல்லப்பட்டுள்ளார் என போலீசார் கூறினர்.
மேலும்
-
என்னை தேர்ச்சி பெற வைத்திடுங்கள்: விடைத்தாளில் ரூ.500 உடன் 10ம் வகுப்பு மாணவர்கள் கோரிக்கை
-
போன் பேச்சு ஒட்டு கேட்கும் தமிழக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
-
நடுவானில் 3 மணி நேரம் வட்டமடித்த விமானம்; ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா விமர்சனம்
-
நக்சல் இல்லா முதல் கிராமம்; சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு
-
மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபர் மீட்பு; ரூ.பல கோடி மதிப்புள்ள சொத்தை அபகரிக்க முயற்சித்த 8 பேர் கைது
-
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 4000 கன அடியாக உயர்வு