3000 ஆண்டு பழமையான கல்வட்டம் செஞ்சி அருகே கண்டுபிடிப்பு

செஞ்சி : செஞ்சி அருகே, 3000 ஆண்டுகள் பழமையான கல்வட்டங்கள் இருப்பதை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த கோணை கிராமத்தில், செஞ்சி அரசு கலைக்கல்லுாரி தமிழ்த்துறை பேராசிரியர் சுதாகர், மாணவர்கள் கார்த்தி, கமேலேஷ் கார்த்திக் ஆகியோர் கள ஆய்வு செய்தனர்.

அப்போது கோணை கிராமத்தில், கல்வட்டங்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

இது குறித்து பேராசிரியர் சுதாகர் கூறுகையில், ''3000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள், தங்களின் தலைவர்கள் அல்லது முக்கிய பிரமுகர்கள் புதைத்த இடத்தில் குத்துக்கல், கல்வட்டம், கல்பதுக்கை, கல்திட்டை, முதுமக்கள் தாழி, கற்குவை, நெடுங்கல் போன்ற அடையாளங்களை ஏற்படுத்தினர்.

இதனால், மற்றவர்களை புதைப்பதற்காக, இந்த இடங்களை தோண்டுவதில்லை.

கோணை பகுதியில், நுாற்றுக்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் இருந்துள்ளன.

இவை காலப்போக்கில் விவசாயத்திற்காக அழிக்கப்பட்டுள்ளது. கோணை கிராமத்தை, தமிழக அரசு பாதுகாக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement