அதிபர் டிரம்புக்கு எதிராக அமெரிக்காவில் போர்க்கொடி

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் கொள்கைகளை எதிர்த்து, நாடு முழுதும் ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமெரிக்க அதிபராக குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப், 78, கடந்த ஜன., 20ல் பதவியேற்றார். அரசின் செலவினங்களை குறைக்கும் நோக்கில், பல்வேறு துறைகளில் பணிபுரிந்த ஊழியர்களை அவர் பணிநீக்கம் செய்தார்.

மேலும், 'அமெரிக்காவுக்கே முன்னுரிமை' என்ற கொள்கையின்படி, பல்வேறு நாடுகளுக்கு அதிக வரிகளை விதித்தார். தொடர்ந்து, அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை, அவர்களது நாட்டுக்கு திருப்பி அனுப்பி வருகிறார்.

அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபடும் வெளிநாட்டு மாணவர்களின் விசாக்களை ரத்து செய்து, அவர்களையும் நாட்டை விட்டு வெளியேற்றி வருகிறார். அதிபர் டிரம்பின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 'ஹேண்ட்ஸ் ஆப்' என்ற பெயரில், அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கானோர் கூடி, கடந்த 5ம் தேதி போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், இரண்டாவது கட்டமாக இந்த போராட்டம் நேற்றும் நடந்தது. நியூயார்க், வாஷிங்டன், டெக்சாஸ், சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட நகரங்களில், அதிபர் டிரம்பின் கொள்கைகளை கண்டித்து, பதாகைகளை ஏந்தி ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நியூயார்க்கில், பிரதான நுாலகத்திற்கு வெளியே கூடிய மக்கள், 'அமெரிக்காவில் மன்னர்கள் இல்லை; கொடுங்கோன்மையை எதிர்க்க வேண்டும்' என்ற முழக்கங்களை எழுப்பினர். இது போல டெக்சாஸ், வாஷிங்டன் உள்ளிட்ட நகரங்களிலும், அதிபர் டிரம்புக்கு எதிராக போராட்டம் நடந்தது.

Advertisement