குட்கா விற்ற கடைக்கு 'சீல்'; மூதாட்டி தற்கொலை
தொண்டாமுத்தூர்: கலிக்கநாயக்கன்பாளையத்தில், குட்கா விற்ற கடைக்கு, உணவு பாதுகாப்புத்துறையினர் சீல் வைத்ததால், மன உளைச்சலில் மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கலிக்கநாயக்கன்பாளையம், காந்தி வீதியை சேர்ந்தவர் அங்கம்மாள்,60. இவரது கணவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். அதன்பின், மகன் ஆனந்தனுடன் வசித்து வருகிறார். அங்கம்மாள், வீட்டின் கீழ்தளத்தில், பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, தொண்டாமுத்தூர் போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் இணைந்து, குட்கா பொருட்கள் விற்பனைக்கு குறித்து, பல்வேறு கடைகளில் சோதனை நடத்தினர். அங்கம்மாள் கடையில் சோதனை நடத்தியபோது, குட்கா பொருட்கள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. விற்பனைக்காக வைத்திருந்த, 224 கிராம் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், அங்கம்மாளின் கடைக்கு 'சீல்' வைத்தனர். இதனால், அங்கம்மாள் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். நேற்று அதிகாலை, மகன் ஆனந்தன், தாய் அங்கம்மாளின் அறைக்கு சென்று பார்த்தபோது, அங்கம்மாள் தூக்கிட்டு மரணமடைந்த நிலையில் காணப்பட்டார். தகவலறிந்து வந்த, தொண்டாமுத்தூர் போலீசார், உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.