மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை:முதல்வரின் மாநில இளைஞர் விருதுக்கு தகுதியான இளைஞர்கள், மே 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இளைஞர்களின் சமுதாய சேவைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், சிறப்பாக சேவை செய்தவர்களுக்கு, 2025ம் ஆண்டுக்கான 'முதல்வரின் மாநில இளைஞர் விருது' வரும் ஆகஸ்ட் 15ம் தேதி, சுதந்திர தின விழாவில் வழங்கப்படுகிறது.
விருதிற்கு, 15 - 35 வயது வரை உள்ள இருபாலரும் விண்ணப்பிக்கலாம். கடந்த 2024 - -25ம் நிதியாண்டில் செய்த சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். மத்திய, மாநில அரசு பணியில் உள்ளவர்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கல்வித்துறையில் பணிபுரிவோர் விண்ணப்பிக்க முடியாது.
விருதிற்கு தேர்வு செய்யப்படுவோருக்கு, ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், பாராட்டு சான்று மற்றும் தங்கப்பதக்கம் வழங்கப்படும்.
தகுதியானோர், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில், மே 3ம் தேதி, மாலை 4.00 மணிக்குள் ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்தார்.