குறுகிய ரோடால் நகருக்குள் வரமுடியாமல் தவிக்கும் வாகனங்கள்

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் சாலை அகலப்படுத்தப்படாததால் வாகன நெரிசல் ஏற்பட்டு மாணவர்கள், அரசு ஊழியர்கள் அவதிப்படுகின்றனர்.

இப்பேரூராட்சியில் நாட்டார்மங்கலம் செல்லும் ரோட்டில் சந்தி வீரன் கூடம் அருகே சாலை குறுகியதாக உள்ளதுடன் சில இடங்களில் மின்கம்பங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனால் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

குறிப்பாக பள்ளி, கல்லூரி செல்லும் வாகனங்கள் நெரிசலில் சிக்கி மாணவர்கள் அவதிக்கு உள்ளாகின்றனர். மதுரையில் இருந்து பஸ்களில் வந்துசெல்லும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

ஒரு வாகனம் மட்டுமே செல்லும் வகையில் சாலை குறுகியதாக இருப்பதால் மற்ற வாகனங்கள் பல நிமிடம் காத்திருந்து செல்ல வேண்டியுள்ளது.

இச்சாலையில் இடையூறாக உள்ள மின் கம்பங்களை வேறு இடத்திற்கு மாற்றுவதுடன், ஆக்கிரமிப்புகள் ஏதேனும் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து அவற்றை அகற்றவும், சாலையை அகலப்படுத்தவும், வாகனங்கள் நகருக்குள் வந்துசெல்ல மாற்று பாதைகளை ஆய்வு செய்யவும் நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement