'ஆர்டர்' ஆக வர்த்தக விசாரணைகள் கனியுமா? ; நம்பிக்கையுடன் ஏற்றுமதியாளர்கள்

திருப்பூர் : ''வர்த்தக விசாரணைகள் அதிகரித்து வருகின்றன. இவை ஆர்டர்களாக மாறினால் அசத்த முடியும்'' என்று திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு, அமெரிக்க பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகள் வரிவிதிப்பதுபோல், அமெரிக்காவும் இறக்குமதி வரியை உயர்த்தி நிர்ணயித்துள்ளது. இந்தியாவின் போட்டி நாடுகளுக்கு, வரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான இறக்குமதி கூடுதல் வரியாக, 26 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சீனா தவிர மற்ற நாடுகளுக்கான வரி உயர்வு, ஜூலை 8 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நட்புக்கரம் நீட்டும்அமெரிக்க நிறுவனங்கள்



சீனாவுடன் தொடர்பில் இருந்த அமெரிக்க வர்த்தக நிறுவனங்கள், இந்தியாவுக்கு நட்புக்கரம் நீட்ட தயாராகிவிட்டனர். பரஸ்பரம் வரிவிதிப்பு என்று அறிவிக்கப்பட்டதால், இரு நாடுகளின் அதிகாரிகள் குழு, வர்த்தக உடன்படிக்கை ஏற்படுத்த தயாராகி வருகிறது.

அமெரிக்காவில் இருந்து இறக்குமதியான பஞ்சில் தயாரான ஆடையை, மீண்டும் அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் போது, சிறப்பு சலுகை கிடைக்கவும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அதற்கான முயற்சியை மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் கையில் எடுத்துள்ளது.

மேலும், மத்திய அரசு, விரைவில் பஞ்சு இறக்குமதிக்கான வரியை ரத்து செய்யும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வரி முழுமையாக நீக்கப்படும் போது, அமெரிக்க பஞ்சு இறக்குமதி அதிகரிக்கும்; திருப்பூரில் இருந்து ஏற்றுமதியாகும் பின்னலாடைகளுக்கான வரியும், அமெரிக்காவில் குறைய வாய்ப்புள்ளது.

''மற்ற நாடுகளை காட்டிலும், இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய, அமெரிக்க நிறுவனங்கள் விரும்புகின்றன. கடந்த இரு வாரங்களாக, வழக்கமான வர்த்தக விசாரணை, இருமடங்காக அதிகரித்துள்ளன. இவை ஆர்டர்களாக மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்'' என்று திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர்.

இப்படியொரு வாய்ப்பு

மீண்டும் கிடைக்குமா?

அமெரிக்க துணை அதிபர் ஜெ டி வான்ஸ், இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வருகிறார். இவரது மனைவி உஷா சிலுக்குரி இந்திய வம்சா வழியை சேர்ந்தவர்; இதனால், இந்தியாவுடனான வர்த்தக உறவை மேம்படுத்த அதிகபட்ச வாய்ப்புள்ளது. இந்தியாவுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரி குறைய வாய்ப்புள்ளது.

கடந்த, 2020ல், 'சீனா ஒன் பிளஸ்' கோட்பாட்டை முன்னணி நிறுவனங்கள் அறிவித்தன. சீனாவுடன் அதிக ஏற்றுமதி வர்த்தகம் செய்யும் நாடுகள், இந்திய வர்த்தக உறவை வளர்க்க முடிவு செய்தன. இருப்பினும், அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை.

சீனாவுக்கான, ஒரு சதவீத ஆர்டர்களை திசை திருப்பினாலே, இந்தியாவுக்கான வளர்ச்சி, 25 சதவீதமாக உயரும். இதுபோன்ற வாய்ப்பு மீண்டும் கிடைக்குமா என்று கூறமுடியாது. மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்தி, அமெரிக்காவுடனான வர்த்தகத்தை வலுப்படுத்தும் நடவடிக்கையை துவக்க வேண்டும். அவ்வாறு செய்தால், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம்நேரடியாக பயனடையும்.

- திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள்.

Advertisement