மீதமாகும் ரெடிமிக்ஸ் கான்கிரீட் கலவையை சாலை பள்ளங்களில் பயன்படுத்த எதிர்பார்ப்பு

சென்னை:சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், மால்கள் கட்டுமானம், மெட்ரோ ரயில், வடிகால், கால்வாய், சாலை உள்ளிட்ட பணிகள், தினமும் நடந்து வருகின்றன.
இதற்கு சிமென்ட் கலவை பயன்படுத்தப்படும். இந்த ரெடிமிக்ஸ் கான்கிரீட், ஓரிடத்தில் தயார் செய்யப்பட்டு, ஆர்.எம்.சி., லாரியில் கட்டுமான பணித்தளங்களுக்கு கொண்டு சென்று பயன்படுத்தப்படும்.
மீதமாகும் கான்கிரீட் கலவை, சாலையோரம் மற்றும் நீர்நிலைகள், நீர்வழிப் பாதைகளில் கொட்டப்படுகிறது. கான்கிரீட் கலவை கெட்டியாகி, பின் அதை அகற்ற முடியாத நிலை ஏற்படுகிறது.
இதனால், நீர்நிலைகள் நாசமாவதுடன், நீர்வழிப் பாதைகளில் அடைப்பு ஏற்பட்டு, வெள்ளப் பாதிப்புக்கும் வழிவகுக்கிறது.
இது குறித்து, நீர்நிலை ஆர்வலர்கள் கூறியதாவது:
குப்பை, கட்டட கழிவால் நீர்நிலைகள் நாசமாகி வருகின்றன. இதில், கான்கிரீட் கலவையும் கொட்டப்படுவதால், அந்த இடம் சீரமைக்க முடியாத பகுதியாக மாறிவிடுகிறது.
கேபிள், குழாய் பதிப்புக்கு தோண்டிய பள்ளங்கள், தரமில்லாத சாலைகள் என, பல சாலைகள் எலும்பை முறிக்கும் குழிகளாக மாறியுள்ளன.
இதில், கட்டட கழிவு கொட்டி நிரப்பி தற்காலிகமாக சீர் செய்யப்படும். அதுவும், ஓரிரு நாளில் மீண்டும் பள்ளமாக மாறி விடுகிறது.
இந்த பள்ளங்களில், தனியார் லாரிகளில் மீதமாகும் கான்கிரீட் கலவையை வாங்கி நிரப்பலாம். மாநகராட்சிக்கு பணச்செலவும் மிச்சமாகும். சாலையும் சீராகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சில கட்டுமான பணித்தளத்தில் மீதமாகும் மண், மாநகராட்சி பூங்கா, மைதானம் போன்ற தாழ்வான இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.
அதுபோல், மீதமாகும் கான்கிரீட் கலவையை, இரவு நேர சாலை பணியாளர்களிடம் ஒப்படைத்து, அதை சாலை பள்ளங்களை நிரப்ப பயன்படுத்தலாம்.
கட்டுமான பணிகள், மாநகராட்சி, சி.எம்.டி.ஏ., அனுமதி பெற்று நடப்பதால், ஆர்.எம்.சி., லாரி உரிமையாளர்களிடம், உயர் அதிகாரிகள் பேச வேண்டும்.
இதன் வாயிலாக, சாலைகளை செலவு இல்லாமல் சீரமைக்க முடியும். நீர்நிலைகளும் பாதுகாக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.