கொளுத்தும் வெயில்; வாரச்சந்தை 'வெறிச்'

அனுப்பர்பாளையம், : வெயில் கொளுத்துவதால், அனுப்பர்பாளையம் வாரச்சந்தைக்கு பொதுமக்கள் வருகை குறைந்துள்ளது.

அனுப்பர்பாளையம், ஏ.வி.பி., ரோட்டில், மாநகராட்சி சார்பில், வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது.

ஞாயிறு தோறும் செயல்படும் வாரச்சந்தைக்கு திருப்பூர், அவிநாசி, நம்பியூர், சேவூர், குன்னத்துார், பெருமாநல்லுார் உள்ளிட்ட ஊர்களில் இருந்து, 500க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மளிகைப்பொருட்கள், துணி, காய்கறிகள், பாத்திரங்கள், பழங்கள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். அனுப்பர்பாளையம், 15 வேலம்பாளையம், ஆத்துப்பாளையம், அங்கேரிபாளையம் பகுதியினர் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

வியாபாரிகள் கூறுகையில், ''முன்பு காலை முதல் இரவு வரை பொது மக்கள் வந்து பொருட்களை வாங்கி செல்வர். வெயில் தொடங்கியதில் இருந்து காலை மற்றும் மதியம் நேரங்களில் பொது மக்கள் வருவதில்லை.

வெயில் குறைய தொடங்கிய பிறகுதான் மாலை 6:00 மணிக்கு மேல்தான் வருகின்றனர். இதனால் போதிய வியாபாரம் இல்லை. வியாபாரம் மந்தமானதால், வியாபாரிகள் வருகையும் குறைந்துள்ளது'' என்றனர்.

Advertisement