மானாமதுரை சித்திரை திருவிழா கோயில் அருகே இடையூறாக வாகனங்கள்

மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயிலில் சித்திரை திருவிழா துவங்க உள்ள நிலையில் கோயிலை மறைத்து நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்த வேண்டும்.

சிவகங்கை தேஸ்தானத்திற்கு உட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் மே.1ம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா துவங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியாக மே 8 ல் திருக்கல்யாணம், மே 9ம் தேதி தேரோட்டமும் நடைபெறும். மே.11ம் தேதி வீர அழகர் எதிர் சேவையும், மே 12 ம் தேதி வீர அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும்.

இந்த விழாவை முன்னிட்டு வீர அழகர் கோயிலை ஒட்டி போலீஸ் ஸ்டேஷன் எதிரே போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அவற்றை போலீசார் அகற்ற வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.

இது குறித்து பக்தர்கள் கூறியதாவது, விபத்தில் சிக்கும் வாகனங்கள், மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்கள், மண் அள்ளும் இயந்திரங்களை போலீசார் பறிமுதல் செய்து நிறுத்தி வைத்துள்ளனர். இவற்றை அகற்ற போலீசார் முன்வரவேண்டும், என்றனர்.

Advertisement