காட்சிப்பொருளாகமுதலுதவிப்பெட்டி

திருப்பூர் : அரசு மற்றும் தனியார் பஸ்களில் பயணிப்போர், விபத்தில் சிக்கும் போது, முதலுதவி செய்ய வேண்டியது அவசியம். மோட்டார் வாகன சட்டப்படி, அனைத்து பஸ்களிலும், மருந்துப் பொருட்களை உள்ளடக்கிய முதலுதவி பெட்டி வைக்கப்பட வேண்டும்.

பெரும்பாலான அரசு பஸ்களில், இத்தகைய முதலுதவி பெட்டி காட்சிப் பொருளாகவே உள்ளது. அரசு பஸ்களை பொறுத்தமட்டில், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மருந்துப் பொருட்கள் இருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். ஆனால், இத்தகைய நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படுவதில்லை, என, புகார் தெரிவிக்கப்படுகிறது.

அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் கூறியதாவது:

மோட்டார் வாகன சட்டப்படி, பஞ்சு, பேண்டேஜ் துணி, டிஞ்சர் என, 32 மருத்துவப் பொருட்களை உள்ளடக்கிய முதலுதவிப் பெட்டி அவசியம் இருக்க வேண்டும். இதனால், பயணத்தின் போது, மருத்துவ உதவி தேவைப்படும் பட்சத்தில், முதலுதவி பெட்டி பயன் உள்ளதாக இருக்கும்.

ஆனால், 80 சதவீதம் பஸ்களில், பெட்டி மட்டுமே பொருத்தப்பட்டுள்ள நிலையில், உள்ளே மருந்துகள் இருப்பதில்லை. மேலும், 20 சதவீதம் பஸ்களில் பெட்டிகளே இருப்பதில்லை. சில நேரங்களில், விபத்து ஏற்பட்டால், காயமடையும் பயணியருக்கு மருந்துகள் போடாமலே, மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் நிலை உள்ளது. இந்த நிலை, தனியார் பஸ்களிலும் தொடர்கிறது.

Advertisement