ஈஸ்டர் பண்டிகை சிறப்பு திருப்பலி 

புதுச்சேரி: புதுச்சேரியில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நேற்று நடந்தது.

ஏசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு 40 நாட்கள் உபவாச ஜெபத்தில் இருந்ததை நினைவு கூறும் தவக்காலம் கடந்த மார்ச் 5ம் தேதி துவங்கியது.

ஒவ்வொரு வெள்ளியும் சிலுவைப்பாடு நினைவு கூறப்பட்டது. கடந்த 18 ம் தேதி புனித வெள்ளி கடைப்பிடிக்கப்பட்டது.

இதையடுத்து, இயேசு உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு நேற்று கிறிஸ்துவ தேவாலங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது.

அதன்படி, மிஷன் வீதியில் உள்ள துாய ஜென்மராக்கினி தேவாலங்களில் புதுச்சேரி - கடலுார் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.

இதேபோல், நெல்லித்தோப்பு விண்ணேற்பு அன்னை ஆலயம், ரயில் நிலையம் எதிரே உள்ள துாய இருதய ஆண்டவர் பசிலிக்கா ஆலயம், அரியாங்குப்பம் ஆரோக்கிய அன்னை ஆலயம், ஆட்டுப்பட்டி அந்தோணியர் ஆலயம், தட்டாஞ்சாவடி பாத்திமா ஆலயம் உட்பட தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்துவர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.

Advertisement