அரசு பஸ் தீப்பிடித்தது ஏன்? இன்று விசாரணை அறிக்கை

திருப்பூர்: திருப்பூர் - பழநி அரசு பஸ் தீப்பிடித்தது ஏன் என்பது குறித்து இன்று விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. நேற்று முன்தினம் திருப்பூரில் இருந்து பழநி அரசு பஸ் ஒன்று நேற்றுமுன்தினம் மாலை புறப்பட்டது. உடுமலை - தாராபுரம் ரோடு சந்திப்பு அருகே பஸ்சின் முன்புறம், டிரைவர் இருக்கை எதிர்புறம் இருந்து புகை வர துவங்கியது.

டிரைவர் அர்ஜூனன் எச்சரித்ததையடுத்து, பஸ்சில் இருந்த, 32 பயணிகளும் பஸ்சை விட்டு இறங்கினர். பஸ் நின்ற இடத்தில் இருந்து, 50 மீ., துாரத்தில் தீயணைப்பு நிலையம் இருந்ததால், பயணிகள் சிலர் ஓடிச்சென்று தகவல் அளித்தனர். அதற்குள் பஸ் டயர், 'செல்ப் மோட்டார்' பகுதியில் தீப்பிடித்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு, சில நிமிடங்களில் தீயை அணைத்தனர்.

திருப்பூர் மண்டல போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், ''தீ விபத்து ஏற்பட்டது, பி.எஸ்., 4 ரக பஸ்; ஏழு ஆண்டுகள் இயக்கத்தில் இருந்துள்ளது. இதுவரை எந்த பிரச்னையும் வரவில்லை. 'செல்ப் மோட்டாரில்' புகை வந்த பின், தீ பிடித்துள்ளது. தொழில்நுட்ப கோளாறா அல்லது வேறு எதுவும் பிரச்னையா என்பது குறித்து விசாரிக்கப்படும்.

பஸ்சை இயக்கத்துக்கு அனுப்பிய, உதவி பொறியாளர், கண்காணிப்பாளர், தொழில்நுட்ப உதவி யாளர், பஸ் இயக்கிய டிரைவர் உள்ளிட்டோரிடம் விசாரித்து, இன்று அறிக்கை தாக்கல் செய்ய திருப்பூர் கிளை மேலாளர் தொழில்நுட்ப மேலாளருக்கு கோவை கோட்ட மேலாண்மை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்'' என்றார்.

Advertisement