லாஸ்பேட்டை ெஹலிபேடு மைதானத்தில் கால்நடைகளை திரியவிட்டால் பறிமுதல் உழவர்கரை நகராட்சி எச்சரிக்கை

புதுச்சேரி: லாஸ்பேட்டைெஹலிபேடு மைதானத்தில் பொது மக்களுக்கு இடையூறாக கால்நடைகளை திரியவிட்டால் பறிமுதல் செய்யப்படும் என உழவர்கரை நகராட்சி எச்சரித்துள்ளது.
லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் கும்பலாக சுற்றி திரியும் கால் நடைகளால் மாணவர்கள், பொதுமக்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகின்றது.
கால் நடைகள் வாங்கிங் செல்லுவோரை தாக்க பாய்கின்றன. இந்த அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றது. கும்பல் கும்பலாக சுற்றி திரியும் கால்நடைகளை கண்டு பொதுமக்கள் சிதறி ஓடுகின்றனர்.
இது குறித்து தினமலரில் செய்தி வெளியான நிலையில் உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் உத்தரவின்பேரில், லாஸ்பேட்டை ெஹலிபேடு மைதானம், மற்றும் சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
உழவர்கரை நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, மாடுகள் வளர்ப்போர் தங்களது மாடுகளை சாலைகள் மற்றும் பொது இடங்களில் திரிய விட கூடாது. சுகாதாரமான முறையில் தங்களுக்கு சொந்தமான இடத்தில் மட்டுமே வளர்க்க வேண்டும்.
லாஸ்பேட்டை ெஹலிபேடு மைதானத்தில் பொது மக்களுக்கு இடையூறாக கால்நடைகளை திரிய விட கூடாது. தவறினால் மாடுகள் பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும். முதல் முறையாக மாடுகள் சிக்கினால் 3 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது முறையாக சிக்கினால் இரட்டிப்பு அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து கால்நடைகளை வீதியில் திரியவிட்டால் மாடுகளின் உரிமையாளர்கள் மீது போலீசில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.