குறைந்து வரும் 'இல்லம் தேடி கல்வி 2.0' திட்ட மையங்கள்

கோவை : கோவை மாவட்டத்தில், 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தின் மையங்கள், 6,722ல் இருந்து 838 ஆக குறைந்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட, கல்வி இடைவெளி மற்றும் மாணவர்களின் கற்றல் குறைவை தவிர்க்கும் நோக்கத்தில், தமிழக அரசு 2021ம் ஆண்டு 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இத்திட்டத்தின் கீழ், தன்னார்வலர்கள் தினமும் மாலை 5:00 முதல் 7:00 மணி வரை மாணவர்களுக்கு கல்வி பயிற்சி வழங்குகிறார்கள். இது, மாணவர்களின் அடிப்படை கல்வித் திறன்கள் மேம்படுவதற்கும், இடைநிற்றலை குறைக்கும் வகையிலும் செயல்படுகிறது.

கோவை மாவட்டத்தில், இந்த திட்டம் தொடங்கிய காலம் முதல், மொத்தம் 15 ஒன்றியங்களில் 6,722 மையங்கள் உருவாக்கப்பட்டன. தமிழகம் முழுவதும்இந்த முயற்சி தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்டு, 2024--25 நிதியாண்டு பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது.

இதனையடுத்து, 2023 ஜூலை மாதத்தில், 'இல்லம் தேடி கல்வி 2.0' என்ற மேம்படுத்தப்பட்ட திட்டம் செயல்பட தொடங்கியது. இப்போது, கோவை மாவட்டத்தில் மொத்த மையங்களின் எண்ணிக்கை, 6,722ல் இருந்து 838 ஆக குறைந்துள்ளது.

இது குறித்து, திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திகாதேவி கூறியதாவது:

திட்டத்தின் முக்கிய நோக்கமான, பின்தங்கிய மாணவர்களின் கல்வி வளர்ச்சியை உறுதி செய்யும் பணிகள், தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக, ஆனைமலை ஒன்றியத்தில் 200 மையங்கள், வால்பாறை பகுதியில் 45 மையங்கள் செயல்படுகின்றன. இந்த மையங்கள், பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கான கற்றல் இடைவெளியை குறைக்கும் முயற்சியாக செயல்படுகின்றன.

மாணவர்களின் கற்றல் நிலை மதிப்பீடு செய்யப்பட்டு, அதற்கேற்ப அவர்களுக்கு தேவையான பாடங்கள்கற்பிக்கப்படுகிறது.

நகர்ப்புற மாணவர்களை விட, பின்தங்கிய பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

தற்போது,கோவை மாவட்டத்தில் 14,000 மாணவர்கள் இல்லம் தேடி கல்வி 2.0 திட்டத்தின் கீழ் பயின்று வருகின்றனர்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement