ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியின் அவல நிலை

அன்னுார் சொக்கம்பாளையம், ஆதி திராவிடர் மாணவியர் விடுதி கட்டடம் பராமரிப்பின்றி உள்ளது.

சொக்கம்பாளையத்தில் ஆதிதிராவிட நலத்துறை மாணவியர் விடுதி செயல்பட்டு வருகிறது. இத்துடன், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவியர்களுக்கு இரண்டு விடுதிகள் உள்ளன.

இதில் ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியின் வடக்கு பகுதி மற்றும் தெற்கு பகுதி சுவர்களில் செங்கல்கள் பெயர்ந்து வருகின்றன. சன் ஷேடில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுகின்றன. உள்ளே உள்ள இரும்பு கம்பிகள் தெரிகின்றன.

முன்புற வாசல் சுற்றுச்சுவரிலும் காரைகள் பெயர்ந்து உள்ளே இருக்கும் கம்பிகள் தெரிகின்றன. வளாகத்தில் அதிக அளவில் புதர்கள் உள்ளன. குளக்கரையில் விடுதி கட்டப்பட்டுள்ளது. அருகிலும் அதிக அளவில் புதர்கள் உள்ளதால் பாம்பு நடமாட்டம் உள்ளது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் மாணவியர் இங்கு தங்கி படித்து வருகின்றனர்.

'அரசு விடுதி வளாகத்தில் பராமரிப்பு பணி செய்யவும் தூய்மைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement