கறிக்கோழி வளர்ப்பு தொகை கட்டுபடியாகவில்லை! போராட்டத்தில் ஈடுபட கூட்டத்தில் முடிவு  

உடுமலை : திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே குடிமங்கலத்தில், விவசாயிகள் கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர்கள் சங்கத்தின் மாநில அளவிலான ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில், விளைநிலங்களில் பண்ணை அமைத்து, கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பங்கேற்றனர்.

கறிக்கோழி பண்ணையாளர்கள் சங்க மாநிலத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி பேசியதாவது:

கோழிக்குஞ்சு மற்றும் தீவனத்தை பெற்றுக்கொண்டு, ஒப்பந்த முறையில், நிறுவனங்களுக்கு கறிக்கோழி வளர்த்து தருகிறோம். தமிழகத்தில், இத்தகைய பண்ணைகள், 40 ஆயிரம் உள்ளன.

கறிக்கோழி நிறுவனத்தினர், நான்கு ஆண்டுகளுக்கு முன், எங்களுக்கு வளர்ப்புத்தொகையாக, கிலோவுக்கு, ரூ.6.50 நிர்ணயம் செய்தனர்.

தற்போது பண்ணை பராமரிப்பு உள்ளிட்ட செலவினங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளது.அதற்கேற்ப, வளர்ப்புத்தொகையை நிறுவனங்கள் உயர்த்தி வழங்கவில்லை. பேச்சுவார்த்தைக்கும் அழைக்கவில்லை.

அனைத்து மாவட்ட பண்ணையாளர்களிடமும் ஆலோசித்து, வளர்ப்புத்தொகையை உயர்த்தி வழங்க கோரி விரைவில், போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம். அதே போல், தமிழக அரசும், நலவாரியம் மற்றும் காப்பீட்டு திட்ட கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை.

விரைவில், கறிக்கோழி நிறுவனங்கள் எங்களை அழைத்து பேசி வளர்ப்புத்தொகையை உயர்த்தி வழங்காவிட்டால், இத்தொழிலை தொடர முடியாத நிலை ஏற்படும்.இவ்வாறு, பேசினார்.

Advertisement