ஒரே நாளில் 33 டன் 'பிளாஸ்டிக்' கழிவு சேகரிப்பு; மாற்று பொருட்களை பயன்படுத்த விழிப்புணர்வு

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் ஒரே நாளில், 4003 பேர் ஈடுபட்ட 'மாஸ் கிளீனிங்' பணியில், 33 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நோக்கில் ஏற்கனவே, 'பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் , குளிர் பான பாட்டில்கள், தட்டுகள், டம்ளர்கள், தேநீர் கோப்பைகள்,' என, 21 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பட்டியலின் எண்ணிக்கை, 28 ஆக அதிகரித்துள்ளது.
மாஸ் கிளீனிங் பணியில் 4003 பேர்
இந்நிலையில், நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில், மாவட்ட முழுவதும் 'மாஸ் கிளீனிங்' பணி நடந்தது. இப்பணியில், ஊரக வளர்ச்சி, காவல் துறை, வனத்துறை, சுற்றுலா துறை, நீதித் துறை உள்ளிட்ட அனைத்து துறை ஊழியர்கள், தன்னார்வ அமைப்பினர் பங்கேற்றனர். இதனை ஊட்டியில் கலெக்டர் லட்சுமி பவ்யா துவக்கி வைத்தார். எஸ்.பி. நிஷா , மாவட்ட வன அலுவலர் கவுதம் முன்னிலை வகித்தனர். மாவட்ட முழுவதும், 4 நகராட்சி , 11 பேரூராட்சி , 35 கிராம ஊராட்சிகளில், 4003 பணியாளர்கள் ஈடுபட்டு பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பு மற்றும் துாய்மை பணியில் ஈடுபட்டனர். காலை முதல், மாலை வரை நடந்த இந்த பணியில், 33,594 கிலோ பிளாஸ்டிக் கழிவு சேகரிக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் லட்சுமி பவ்யா கூறுகையில், ''பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு பணியால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணியர் நமது வீடு, பகுதி, ஊர், நகரம் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை சுத்தமாக வைத்து கொள்வது குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது,''என்றார்.
பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில், 'பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு' குறித்து துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், ஊட்டி மார்க்கெட் உள்ளிட்ட அனைத்து வணிக வளாகங்கள், அனைத்து கடைகளின் முன்பு குப்பை தொட்டிகள் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.