7 டன் ரேஷன் அரிசி பதுக்கல்: துாத்துக்குடி ஆசாமி கைது
விழுப்புரம்: விக்கிரவாண்டியில் ரேஷன் அரிசி பதுக்கிய வரை போலீசார் கைது செய்தனர்.
விக்கிரவாண்டி வி.ஜி.ஆர். நகர் அரிசி ஆலை ஒன்றில், மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர் தலைமையிலான குழுவினர், கடந்த 5ம் தேதி சோதனை நடத்தினர்.
அங்கு 148 மூட்டைகளில், 7 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்து, பறிமுதல் செய்தனர். இதுகுறித்து, விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரேஷன் அரிசி பதுக்கி வைத்த நபர்களை தேடி வந்தனர்.
விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அடுத்த வானரமுட்டி பகுதியை சேர்ந்த மாரிமுத்து, 45; உள்ளிட்ட சிலர் சேர்ந்து, விக்கிரவாண்டி சுற்றுவட்டாரத்தில், பொது மக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதனை பாலீஷ் செய்து வெளி மார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு விற்பதற்காக, அந்த அரிசி ஆலையில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் பிரிவு போலீசார், மாரிமுத்துவை நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் சிலரை தேடி வருகின்றனர்.