யாரிடம் நிதியும், அதிகாரமும் இருக்கிறதோ, அவரிடம் கேளுங்க; அமைச்சர் தியாகராஜன் விரக்தி

29


சென்னை: நீலகிரி மாவட்டம் கூடலுாரில் ஐ.டி., பார்க் அமைக்கக் கோரிய அ.தி.மு.க., உறுப்பினருக்கு, ''யாரிடம் நிதியும், திறனும், அதிகாரமும் இருக்கிறதோ, அவரிடம் கேட்டால் அவர் செய்து கொடுப்பார் என்று கருதுகிறேன்,'' என்று சட்டசபையில் அமைச்சர் தியாகராஜன் விரக்தியுடன் பதில் அளித்தார்.


சட்டசபையில் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தியாகராஜன் அளித்த பதில்: இந்த கூட்டத்தொடரிலே, இந்த அவையில் நான் என்னுடைய துறையில் இருக்கும் சிக்கல்களை கூறி இருக்கிறேன். நிதியும் மிகவும் குறைவாக ஒதுக்கப்படுகிறது. மற்ற மாநிலங்கள் போல் எல்லா தொழில்நுட்ப பூங்காக்களும், எங்கள் துறையில் செயல்படுவது இல்லை.

சின்ன பங்கு தான், எங்கள் துறையில் செயல்படுகிறது. பாக்கி, டைடல், நியோ டைடல் எல்லாம் தொழில்துறையில் செயல்பட்டு வருகிறது. அது அசாதாரணமான சூழ்நிலையாக இருந்தாலும் அது தான் 20 ஆண்டுகளாக தமிழகத்தில் நடந்து கொண்டு இருக்கிறது. எனவே யாரிடம் நிதியும், அதிகாரமும் இருக்கோ, அவரிடம் கேட்டால், அவர் செய்து கொடுப்பார் என்று நான் கருதுகிறேன். அது எங்களிடம் இல்லை. இவ்வாறு தியாகராஜன் பேசினார்.

சபாநாயகர் 'அட்வைஸ்'



இதற்கு சபாநாயகர் அப்பாவு, '' உறுப்பினர் கேட்கிறாங்க, அமைச்சர் இதெல்லாம் நீங்கள் உள்ளுக்குள் பேசி, முதல்வரிடம் முடிவு எடுக்க வேண்டியது, பாசிட்டிவாக பதில் சொன்னால் உறுப்பினர்களுக்கு நன்றாக இருக்கும்'' என அறிவுறுத்தினார்.

முன்னதாக, அமைச்சரின் பதிலை கேட்டதும், தி.மு.க., உறுப்பினர்கள், குறிப்பாக அமைச்சர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தன்னிடம் இருந்த நிதித்துறை பறிக்கப்பட்டதில் இருந்தே விரக்தியில் இருக்கும் அமைச்சர் தியாகராஜன், அதை இந்த பதிலில் வெளிக்காட்டி விட்டதாக இணையத்தில் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement