கோவில்களில் 85 திருமண மண்டபங்கள்: அமைச்சர் சேகர்பாபு
சென்னை: ''தி.மு.க., ஆட்சியில் 85 திருமண மண்டபங்கள், 207 கோடி ரூபாய் செலவில் கட்டப்படுகின்றன. புதிதாக 20 திருமண மண்டபங்கள் கட்ட, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
தி.மு.க., - கருணாநிதி: பல்லாவரம் தொகுதியில், ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, 10 கோடி ரூபாய் செலவில், 'ரோப்கார்' அமைத்துத் தரப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த பணி எப்போது துவங்கும்? கோவிலைச் சுற்றி பூமிக்கடியில் மின்கேபிள் புதைக்கப்பட்டு, மின் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது.
அமைச்சர் சேகர்பாபு: இங்கு, 19.6 கோடி ரூபாய் செலவில், ரோப்கார் வசதி ஏற்படுத்த, அரசு ஒப்புதல் கிடைத்ததும், பணிகள் துவக்கப்படும்.
மனிதநேய மக்கள் கட்சி - ஜவாஹிருல்லா: பாபநாசம் தொகுதி, அய்யம்பேட்டையில் தண்டாயுதபாணி கோவில் உள்ளது. இதனை சுற்றியுள்ள 48 கோவில்களின் வரவு, செலவு கணக்குகள் இங்குதான் பராமரிக்கப்படுகின்றன. ஆனால், நிர்வாக அலுவலகம் இல்லை. இங்கு பணியாற்றும் அலுவலர்கள் வசதிக்காக தனி அலுவலகம் அமைத்துத் தர வேண்டும்.
அமைச்சர் சேகர்பாபு: அலுவலகம் கட்டித் தரப்படும்.
அ.தி.மு.க., - மரகதம் குமரவேல்: மதுராந்தகம் தொகுதியில் உள்ள, பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், பக்தர்கள் வசதிக்காக, திருமண மண்டபம் அமைத்துத் தர வேண்டும்.
அமைச்சர் சேகர்பாபு: இந்த ஆட்சியில் 85 திருமண மண்டபங்கள், 207 கோடி ரூபாயில் கட்டப்படுகின்றன. புதிதாக 20 திருமண மண்டபங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு, திருமண மண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.