ஜே.சி.பி., நிறுத்திய தகராறு அ.தி.மு.க., ஊராட்சி தலைவர் மகன் கைது

திருவெண்ணெய்நல்லுார் : ஜே.சி.பி., நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் தி.மு.க., ஒன்றிய செயலாளர் தாக்கப்பட்டார். இரு தரப்பிலும் 11 பேர் மீது வழக்குப் பதிந்து, அ.தி.மு.க., வை சேர்ந்த ஊராட்சி தலைவரின் மகனை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஆனத்துாரை சேர்ந்தவர் சந்திரசேகரன், 43; தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர்.

இவர், அதே பகுதியில் வசித்து வரும் ஊராட்சி தலைவரான, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த பல்லவராஜன் மனைவி சரஸ்வதி வீட்டு அருகே பொது இடத்தில் ஜே.சி.பி., இயந்திரத்தை நிறுத்தி வைத்திருந்தார்.

நேற்று முன்தினம் மாலை சரஸ்வதியின் மகன் சஞ்சய்குமார், 22; அந்த வழியாக டிராக்டர் டிப்பரில் செங்கல் ஏற்றி வந்துள்ளார்.

அப்போது குறுக்கே ஜே.சி.பி., இருந்ததால், அதனை நகர்த்தி நிறுத்துமாறு சந்திரசேகரனிடம் கூறினார்.

அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, கோஷ்டி மோதலாக மாறியது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இதுகுறித்து இரு தரப்பு புகாரின் பேரில், சஞ்சய்குமார், பல்லவராஜன், சந்தோஷ், குமார், சந்திரசேகரன், சதீஷ், சுபாஷ் உட்பட 11 பேர் மீது திருவெண்ணெய்நல்லுார் போலீசார் நேற்று வழக்குப் பதிந்து சஞ்சய் குமாரை கைது செய்தனர்.

இந்நிலையில், போலீசார் ஒருதலைபட்சமாக கைது நடவடிக்கை எடுத்ததாக, ஊராட்சி தலைவரின் கணவர் பல்லவராஜன் ஆதரவாளர்கள் 20க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை 5:00 மணியளவில் காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

அப்பகுதியில் பதட்டம் நிலவுவதால் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement