அன்று இனித்தது; இன்று கசக்கிறதா? முதல்வருக்கு பழனிசாமி கேள்வி

சென்னை : ''நாங்கள் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்தால், நீங்கள் ஏன் கோபப்படுகிறீர்கள்; யாரோடும் நாங்கள் கூட்டணி வைப்போம்,'' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறினார்.

சட்டசபை வளாகத்தில், அவர் அளித்த பேட்டி:

நீட் தேர்வை கொண்டு வந்ததே தி.மு.க., தான்

மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வு குறித்து, 2010 டிசம்பரில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மத்தியில் காங்கிரஸ் தலைமையில், கூட்டணி ஆட்சி நடந்தது; அந்த அமைச்சரவையில் தி.மு.க., இடம்பெற்றிருந்தது. தி.மு.க.,வை சேர்ந்த காந்திசெல்வன், மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சராக இருந்தபோதுதான், 'நீட்' தேர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டது.

நீட் தேர்வை கொண்டு வந்தது, காங்கிரஸ், தி.மு.க., அரசு. அதை தடுக்க, நாங்கள் கடுமையாக முயற்சித்தோம். நீதிமன்ற தீர்ப்புக்கு பின், வேறு வழியின்றி நடைமுறைப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. நீட் தேர்வைக் கொண்டு வந்தது தி.மு.க.,தான்; ஆனால், அ.தி.மு.க., தடுக்க முயற்சித்தது.

சட்டசபை தேர்தலில், 'நீட் தேர்வை ரத்து செய்வதாக, தி.மு.க., கூறியது. 'இண்டி' கூட்டணி ஆட்சிக்கு வந்திருந்தால் ரத்து செய்திருப்போம் என்கிறார், முதல்வர். இதை, 2010ல் கொண்டு வந்தபோதே ரத்து செய்திருக்கலாமே. இப்படித்தான், எல்லா விஷயங்களிலும் மாற்றி மாற்றி பேசி மக்களைக் குழப்புகின்றனர்.

ஆட்சி மாற்றம்; முதல்வருக்கு பயம்

எப்போது பார்த்தாலும், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி பற்றியே பேசுகின்றனர். முதல்வர் ஸ்டாலின் கோபமாக பேசுகிறார். நாங்கள் கூட்டணி வைத்தால், நீங்கள் ஏன் பதறுகிறீர்கள்; ஏன் கோபப்படுகிறீர்கள்; ஏன் பயப்படுகிறீர்கள்?

நாங்கள் யாரோடும் கூட்டணி வைப்போம். எங்கள் கட்சி, 2026 தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அதற்காக கூட்டணி வைக்கிறோம். நீங்கள் பலமான கூட்டணி என்கிறீர்கள். அதேபோல், நாங்களும் பா.ஜ.,வும் பலம் வாய்ந்த கூட்டணி அமைப்போம். தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம்.

முதல்வர் இப்படி ஆதங்கப்படுவது, அதிர்ந்து போய் பேசுவதை பார்க்கும்போது, முதல்வருக்கு பயம் வந்து விட்டதாக தெரிகிறது. அ.தி.மு.க., கூட்டணி அமைந்தால், ஆட்சி மாற்றம் ஏற்படும். அ.தி.மு.க., ஆட்சிக்கு வரும் என்பதன் வெளிப்பபாடாக, முதல்வர் பதற்றமடைகிறார்.

தி.மு.க., ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்ற கருத்துடைய கட்சிகளை இணைத்து, கூட்டணி அமைப்போம். பா.ஜ., உடன் கருணாநிதி கூட்டணி அமைத்தபோது, 'ஊழலை விட மதவாதம் என்பது கொடுமையானது அல்ல' என்றார்.

அன்று இனித்தது; இன்று கசக்கிறது

'சிறுபான்மையின மக்களிடம், பா.ஜ., குறித்து ஒரு சந்தேகத்தை, ஒருசிலர் உருவாக்கி வைத்துள்ளனர். பொய் பிரசாரம் செய்கின்றனர். அதற்கு ஈடுகொடுத்து, அதை முறியடிக்க வேண்டிய பொறுப்பு, தி.மு.க.,வினருக்கு உண்டு' என்றும், கட்சி பத்திரிகையில் கருணாநிதி எழுதியுள்ளார். ஆக, பா.ஜ.,வோடு கூட்டணியாக இருந்த போது, இப்படிப்பட்டக் கருத்தைத்தான் கருணாநிதி கூறி, கட்சியினரை பா.ஜ.,வை ஏற்க வைத்தார்.

ஆனால், இப்போது அ.தி.மு.க.,-பா.ஜ.,வோடு கூட்டணி என்றதும் பதறுகிறார் முதல்வர். சிறுபான்மையினரை அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு எதிராக திருப்ப முயற்சிக்கிறாராம்.

ஆக, ஏற்கனவே கூட்டணியில் இருந்தபோது, பா.ஜ., இனித்தது; இப்போது தி.மு.க.,வுக்கு கசக்கிறது. கடந்த 1999ல் தி.மு.க., - பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சி அமைத்தது. உடல்நிலை பாதிக்கப்பட்ட மாறன், இலாகா இல்லாத அமைச்சராக ஓராண்டு காலம் மருத்துவமனையில் இருந்தார். மருத்துவமனை செலவுகளை அரசே ஏற்க, இலாகா இல்லாத அமைச்சராக வைத்திருந்தனர். அதற்கெல்லாம் அப்போது உதவியது பா.ஜ., அதனாலேயே பா.ஜ., நல்ல கட்சியாக தி.மு.க.,வுக்கு தெரிந்தது. தற்போது, அ.தி.மு.க., கூட்டணி அமைத்ததும், 'ஏன் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்கிறீர்கள்?' என கேட்கிறார் ஸ்டாலின்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement