தட்டுப்பாடின்றி குடிநீர்: அமைச்சர் நேரு உறுதி

சென்னை: ''தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு உறுதி அளித்தார்.

சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:

புரட்சி பாரதம் ஜெகன்மூர்த்தி: வேலுார் மாவட்டம், கே.வி.குப்பம் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில், குடிநீர் தட்டுப்பாட்டால், மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் வாயிலாக, குடிநீர் வழங்க வேண்டும்.

அமைச்சர் நேரு: காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் வாயிலாக, வேலுார் மாநகராட்சி, 11 நகராட்சிகள், ஐந்து பேரூராட்சிகள், 14 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த, 944 ஊரக குடியிருப்புகளுக்கு, காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்திலும்; கே.வி.குப்பம் ஒன்றியத்தில் 22 ஊராட்சிகளுக்கு, சென்னாங்குப்பம், செஞ்சி, சோழமூர், சேத்துவாண்டை ஆகிய நான்கு கூட்டுக்குடிநீர் திட்டத்திலும், குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

கே.வி.குப்பம் ஒன்றியத்தில் 14, குடியாத்தம் ஒன்றியத்தில் 30 ஊராட்சிகளுக்கு, உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக, உள்ளூர் நீர் ஆதாரங்களை வைத்து, போதுமான குடிநீர் வழங்கப்படுகிறது.

எனவே, கே.வி.குப்பம் ஒன்றியத்திற்கு, புதிதாக காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டுவர வேண்டிய அவசியம் இப்போது இல்லை.

வேலுார் மாவட்டத்தில் குடிநீர் கிடைக்காத கிராமங்களுக்கு, வேலுார் மெகா கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்க, நடவடிக்கை எடுக்கப்படும்.

அ.தி.மு.க., செல்வராஜ்: கோவை மேட்டுப்பாளையம் தொகுதியில் வழங்கப்படும் குடிநீர் போதுமானதாக இல்லை.

அமைச்சர் நேரு: கோவையில் அதிகமான குடிநீர் திட்டங்கள் இருப்பதால், தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement