வோடபோனில் அரசின் பங்கு 49 சதவீதமாக அதிகரிப்பு

புதுடில்லி; வோடபோன் ஐடியாவில் அரசின் பங்கு 48.99 சதவீதமாக உயர்ந்ததை தொடர்ந்து, அதன் பங்குகள் மும்பை பங்கு சந்தையில் உயர்வு கண்டன.

வோடபோன் ஐடியாவின் ஸ்பெக்ட்ரம் கட்டண பாக்கியின் ஒரு பகுதியை, 36,950 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளாக அரசு மாற்றிக் கொண்டதை தொடர்ந்து, அந்நிறுவனத்தில் அரசின் பங்குகள் 22.60 சதவீதத்தில் இருந்து, 48.99 சதவீதமாக உயர்ந்தது.

இதையடுத்து, நேற்று மும்பை பங்கு சந்தையில், வோடபோன் ஐடியாவின் பங்குகள் ஒவ்வொன்றும் 7.79 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டன. இது, 6.42 சதவீத அதிகரிப்பாகும்.

நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரராக அரசு மாறினாலும், வோடபோன் மற்றும் ஆதித்யா பிர்லா குழுமம், நிறுவனத்தின் செயல்பாட்டுக்கான கட்டுப்பாட்டை தங்கள் வசம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

Advertisement