போக்குவரத்து ஊழியர்கள் புதிய ஒப்பந்தம் கோரி ஆர்ப்பாட்டம்

2

சென்னை : போக்குவரத்து ஊழியர்களுக்கு, புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில், பல்லவன் இல்லத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

போக்குவரத்து ஊழியர்களுக்கு, 15வது புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும், சென்னையில் மின்சார மினி பஸ்கள் அரசே இயக்க வேண்டும்.

போக்குவரத்துக் கழகங்களின் இழப்பு தொகையை வழங்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுதும் மண்டல தலைமையகங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

சென்னையில் பல்லவன் இல்லம் முன்பு, போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், சி.ஐ.டி.யு., தலைவர் துரை தலைமை தாங்கினார். பொதுச்செயலர் ஆறுமுக நயினார், ஏ.ஐ.டி.யு.சி., மாநில துணைப் பொதுச் செயலர் நந்தா சிங் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

சி.ஐ.டி.யு., பொதுசெயலர் ஆறுமுகநயினார் கூறியதாவது:



போக்குவரத்து ஊழியர்களுக்கான, புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர்ந்து தாமதமாகி வருகிறது. அரசு உடனடியாக பேசி முடிக்க வேண்டும். ஓய்வு பெற்றவுடன் பணப்பலன், ஓய்வூதியர்களின் அகவிலைப்படி உயர்வுக்கு தீர்வு காண வேண்டும்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். காலியிடங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். அரசு எங்கள் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement