சாதகமான முடிவை அறிவிக்காத தமிழக அரசு குவாரி தொழிலாளர்கள் மீண்டும் போராட்டம்

ஒசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் கிரஷர், குவாரி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடாமல் இருந்த நிலையில், அரசு எந்த முடிவும் அறிவிக்காததால், நேற்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வலியுறுத்தல்
தமிழக அரசு, குவாரிகளில் இருந்து கல் உடைத்து எடுத்துவர, கொடுக்கும் நடைச்சீட்டை இதுவரை ஒரு கன மீட்டர், 1.75 டன் என நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, 2.75 டன் என அறிவித்துள்ளது.
மேலும், குவாரி இருக்கும் நிலங்களுக்கான வரி என, ஒரு டன்னுக்கு, 90 ரூபாய் செலுத்த அரசு உத்தரவிட்டது. இதை திரும்பப்பெற வலியுறுத்தி, ஓசூர் கிரஷர் ஓனர்ஸ் பெடரேஷன் சார்பில் கடந்த, 5ம் தேதி முதல், 60 சதவீத குவாரிகள், கிரஷர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன.
தமிழ்நாடு கல் குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கமும், போராட்டம் அறிவித்ததால் கடந்த, 16 முதல், மாவட்டத்திலுள்ள, 103 குவாரிகள் மற்றும் 72க்கும் மேற்பட்ட கிரஷர்களை மூடி, உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
லாரிகளில் லோடு ஏற்றாததால் வேலையிழந்துள்ள, 15,000 தொழிலாளர்கள், கிரஷர், குவாரி உரிமையாளர்களுடன் சேர்ந்து, சூளகிரி அடுத்த கோனேரிப்பள்ளி அருகே, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் கடந்த, 19ல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அன்று மாலை, அமைச்சர் துரைமுருகன் மற்றும் துறை சார்ந்த செயலர்களுடன், கிரஷர், குவாரி உரிமையாளர்கள் பேச்சு நடத்தினர். ஏற்கனவே வழங்கப்பட்ட 24 கோரிக்கைகளில், 15 கோரிக்கைகளை ஏற்பதாக, அமைச்சர் அறிவித்தார்.
போராட்டம்
தற்போது பிரச்னையாக உள்ள, இரண்டு உத்தரவை திரும்பப் பெற கேட்டபோது, முதல்வர் ஸ்டாலின் மற்றும் நிதித்துறை செயலரிடம் பேசிவிட்டுக் கூறுவதாக, அமைச்சர் பதில் அளித்து உள்ளார்.
தங்களுக்கு சாதகமாக, அரசிடமிருந்து பதில் வரும் என நினைத்து, தொழிலாளர்கள் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபடவில்லை.
ஆனால், அரசிடமிருந்து எந்த பதிலும் வராததால், நேற்று மீண்டும் கோனேரிப்பள்ளியில், 3,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓசூர், கிரஷர், ஓனர் பெடரேஷன் தலைவர் சம்பங்கி நிருபர்களிடம் கூறுகையில், ''மாவட்டத்தில் உள்ள, ஆறு எம்.எல்.ஏ.,க்களும், சட்ட சபையில் எங்களது நியாயமான கோரிக்கை குறித்து பேசாமல் உள்ளனர்.
''அரசின் மவுனத்தால் போராட்டம் தொடர்கிறது. கட்டுமானப் பொருட்கள் தட்டுப்பாடால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன,'' என்றார்.
மேலும்
-
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., உடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
-
தேசிய நெடுஞ்சாலையில் லாரிகள், அரசு பஸ் மோதல்; போக்குவரத்து பாதிப்பு
-
காங்கிரஸ் கூட்டம் 'பிளாப்' - கார்கே காட்டம்: பீகாரில் திணறும் காங்கிரஸ்; யார் பொறுப்பு ?
-
ஜெய்ப்பூர் அரண்மனையை பார்த்து வியந்த அமெரிக்கா துணை அதிபர் வான்ஸ் குடும்பம்
-
ஓசூரில் புதிய விமான நிலையம் ; இறுதி சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தாக்கல்
-
இருநாள் பயணமாக சவுதி அரேபியா புறப்பட்டார் பிரதமர் மோடி