நடிகர் சிவாஜி அன்னை இல்லம் வீடு 'ஜப்தி' உத்தரவு ரத்து

சென்னை : நடிகர் சிவாஜியின் 'அன்னை இல்லம்' வீட்டை, ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சிவாஜியின் பேரன் துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர், 'ஈசன் சினிமா' தயாரிப்பு நிறுவனத்தில் பங்குதாரர்களாக உள்ளனர். இந்நிறுவனம், 'ஜகஜ்ஜால கில்லாடி' என்ற படத்தை தயாரித்தது.

அன்னை இல்லம்



படத்தயாரிப்புக்காக, 'தனபாக்கியம் என்டர்பிரைசஸ்' என்ற நிறுவனத்திடம் இருந்து, துஷ்யந்த் வாங்கிய, 3.75 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தவில்லை.

அதற்கு வட்டியுடன் சேர்த்து, 9.20 கோடி ரூபாய் செலுத்த ஏதுவாக, ஜகஜ்ஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும், கடன் வழங்கிய நிறுவன இயக்குநரிடம் ஒப்படைக்கும்படி, கடந்த ஆண்டு மத்தியஸ்தர் உத்தரவிட்டார்.

அதன்படி, பட உரிமைகள் வழங்காததால், சென்னை தி.நகரில் உள்ள, நடிகர் துஷ்யந்தின் தாத்தாவான சிவாஜி வீட்டை ஜப்தி செய்து, பொது ஏலம் விட வேண்டும் என, உயர் நீதிமன்றத்தில் தனபாக்கியம் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நடிகர் சிவாஜியின், 'அன்னை இல்லம்' வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.

இந்த உத்தரவை நீக்கக் கோரி, நடிகர் பிரபு மனு தாக்கல் செய்தார்.

மனுவில், 'வீடு எனக்கு சொந்தமானது. தந்தை சிவாஜி, தன் பெயருக்கு உயில் எழுதி வைத்துள்ளதால், வீட்டை ஜப்தி செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' எனக் கோரியிருந்தார்.

முழு உரிமையாளர்



இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்துாஸ், ''வழக்கு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்ததில், அன்னை இல்லம் வீட்டின் முழு உரிமையாளர் பிரபு என்பதால், அவரது வீட்டை ஜப்தி செய்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

''இதுகுறித்து, பதிவுத்துறை வில்லங்கப்பதிவில் திருத்தம் செய்ய வேண்டும்,'' என, உத்தரவிட்டார்.

Advertisement