புதிய ரேஷன் கார்டு தாமதம்; உணவு ஆணையத்தில் புகார்

சென்னை : புதிய ரேஷன் கார்டு வழங்க தாமதமாவது குறித்து, மாநில உணவு ஆணையத்தில், பலரும் புகார் அளித்து வருகின்றனர்.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாநிலத்திலும், மாநில உணவு ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆணையம், ஒரு தலைவர் மற்றும் ஐந்து உறுப்பினர்களுடன் செயல்படுகிறது.

தமிழகத்தில் உணவு ஆணையத்தின், முதல் தலைவராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி வாசுகி இருந்தார். அவர், திருநங்கை, கணவனை இழந்த பெண்களுக்கு ரேஷன் கார்டு கிடைக்கவும், விண்ணப்ப தாரர்களுக்கு விண்ணப்பித்த 30 நாட்களுக்குள், ரேஷன் கார்டு கிடைக்கவும் நடவடிக்கை எடுத்தார்.

வாசுகி, 2023 பிப்ரவரி யில் ஓய்வு பெற்றார். பின், ஆணைய தலைவர் பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை.

கடந்த, 2023 செப்டம்பரில் இருந்து, தமிழக அரசு, மகளிருக்கு மாதம், 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்குகிறது. இதற்கு பயனாளிகளை தேர்வு செய்ய, ரேஷன் கார்டு அவசியம். இதனால், பலரும் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பிப்பதால், கார்டு வழங்க தாமதம் செய்யப்படுகிறது.

இரண்டரை ஆண்டுகளுக்குப் பின், தற்போது, ஆணைய தலைவராக, முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

எனவே, ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து, இதுவரை கார்டு பெறாதவர்கள், புதிய கார்டு வழங்க உத்தரவிடக் கோரி, ஆணையத்தில் புகார் அளித்து வருகின்றனர்.


இதுகுறித்து, உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தற்போது, ஆணையம் செயல்படுவதால், புகார்கள் வருகின்றன. தகுதியான நபருக்கு, குறித்த நேரத்தில் சேவைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Advertisement