அதிகபட்ச எப்.எஸ்.ஐ.,யில் அடுக்குமாடி குடியிருப்பு; நகர்ப்புற வாழ்விட வாரியம் முடிவு

சென்னை : தனியார் நிறுவனங்கள் போன்று, அதிகபட்ச தளப்பரப்பு குறியீடு எனப்படும் எப்.எஸ்.ஐ., பயன்படுத்தி, அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்த, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் முடிவு செய்து உள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற ஏழை மக்களுக்கான குடியிருப்பு திட்டங்களை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் செயல்படுத்தி வருகிறது.

இதில், 30 ஆண்டுகளுக்கு முன், கட்டப்பட்ட குடியிருப்புகளை இடித்து விட்டு, அதிக தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிகளை, வாரியம் துவக்கி உள்ளது.

அனுமதி



இதுமட்டுமல்லாது, மத்திய, மாநில அரசின் நிதியை பயன்படுத்தியும், அடுக்குமாடி குடியிருப்புகளையும் கட்டி வருகிறது. இதுவரை வாரிய குடியிருப்புகள், அதிகபட்சமாக நான்கு அல்லது ஐந்து தளங்களை கொண்டதாக மட்டுமே கட்டப்பட்டு வந்தன.

கடந்த சில ஆண்டுகளாக, 10, 13 மாடிகளாக குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. இதிலும், சாலை அகலம், மனை பரப்பளவு அடிப்படையில், பொது கட்டட விதிகளின்படி அனுமதிக்கப்படும் தளப்பரப்பு குறியீட்டை மட்டுமே வாரியம் பயன்படுத்துகிறது.

ஆனால், தனியார் கட்டு மான நிறுவனங்களால், தளப்பரப்பு குறியீட்டில் அதிகபட்ச அளவு மற்றும் 'பிரீமியம்' எனப்படும் கூடுதல் தளப்பரப்பு குறியீட்டை பயன்படுத்துவதால், அதிக எண்ணிக்கை யில் வீடுகள் கட்ட முடிகிறது.

இந்த வழிமுறையை கடைபிடிக்க, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் முடிவு செய்து உள்ளது.

இதுகுறித்து, வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:



தமிழகத்தில் ஏழை மக்களுக்கான வீடுகளுக்கு தேவை அதிகரித்து வருகிறது. இதனால், அதிக தளங்களை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவது தவிர்க்க முடியாததாக உள்ளது.

இதற்காக, பொது கட்டட விதிகளின்படி அனுமதிக்கப்படுவதைவிட, அதிகபட்ச தளப்பரப்பு குறியீட்டைப் பெற திட்டமிட்டு இருக்கிறோம். அரசிடம் இருந்து இதற்கு அனுமதி கிடைத்துள்ளது.

கட்டுமான திட்ட அனுமதி வழங்குவதில் கூடுதல் செலவு இன்றி, அதிகபட்ச தளப்பரப்பு குறியீடு பெறுவது குறித்து, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமமான சி.எம்.டி.ஏ., மற்றும் நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து செயல்பட இருக்கிறோம்.

வாய்ப்பு



தற்போதைய நிலவரப்படி, சாலை அகலம், மனை பரப்பளவு அடிப்படையில், 3.5 மடங்கு வரை, எப்.எஸ்.ஐ., பயன்படுத்தப்படுகிறது. இதை ஐந்து மடங்கு வரை அதிகரித்து பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாக, ஒவ்வொரு திட்டத்திலும் தற்போது கட்டப்படுவதை விட, 20 முதல், 30 சதவீதம் கூடுதல் எண்ணிக்கையில் வீடுகள் கட்ட வழி ஏற்படும்.


இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement