மின்கம்பி அறுந்து விழுந்து இரு சக்கர வாகன ஓட்டி பலி

துமகூரு: கன மழை பெய்தபோது, மின்கம்பி அறுந்து விழுந்ததில், இரு சக்கர வாகன ஓட்டி உயிரிழந்தார்.

துமகூரு மாவட்டம், கொரட்டகெரேயின் சீலகனஹள்ளியை சேர்ந்தவர் யோகேஷ், 42. நேற்று முன்தினம் இவரும், இவரது நண்பர் நரசிம்மராஜுவும் இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தனர்.

இந்த வேளையில் கன மழை பெய்து கொண்டிருந்தது. கிராமத்தின் அருகே சென்றபோது, அவர்கள் மீது மின்கம்பி விழுந்தது. இதனால், இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.

இதை பார்த்த அப்பகுதியினர், உடனடியாக டிரான்ஸ்பார்மரில் மின் இணைப்பை துண்டித்தனர். படுகாயம் அடைந்த இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் யோகேஷ் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். படுகாயமடைந்த நரசிம்மராஜுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரட்டகெரே போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement