தமிழில் பெயர் வைக்காவிட்டால் ரூ.2,000 அபராதம்: சாமிநாதன்

11

சென்னை : ''தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு விதிக்கப்படும் அபராதம், 50 ரூபாயில் இருந்து, 2,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது,'' என, அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.

சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:

தி.மு.க., - இனிகோ இருதயராஜ்: திருச்சி பாலக்கரை, பிரபாத் திரையரங்கம் அருகில், நடிகர் சிவாஜி கணேசனுக்கு நிறுவப்பட்ட சிலையை திறக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சர் சாமிநாதன்: ரசிகர் மன்றம் சார்பில் அந்த சிலை வைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் அமைச்சர் நேரு, சிலை அமைக்க நிதி கொடுத்துள்ளார். சிலை திறக்க முடியாததற்கு, உச்ச நீதிமன்ற தீர்ப்பு தான் காரணம். பொது இடங்களில் சிலை வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, சிலை மூடி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து முதல்வருடன் கலந்து பேசி, தகுந்த இடத்தை தேர்வு செய்து, அங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இனிகோ இருதயராஜ்: திருச்சி மாநகராட்சி தீர்மானத்துடன், 9 அடி உயர வெண்கல சிலை அமைக்கப்பட்டது.

கடந்த 2018ல் தொடர்ந்த வழக்கில், நகரின் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் சிலையை நிறுவி, மரியாதை செலுத்த நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. சத்திரம் பஸ் நிலையம் அல்லது பாலக்கரை கால்நடை மருத்துவமனை அருகில் அமைத்து தர வேண்டும்.

அமைச்சர் சாமிநாதன்: முதல்வர் அனுமதி பெற்று, மக்கள் அதிகம் கூடும் இடத்தில், மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் அனுமதியுடன் சிலை வைக்கப்படும்.

இனிகோ இருதயராஜ்: வணிக நிறுவனங்கள், கடைகளின் பெயர் பலகையை தமிழில் எழுத வேண்டும் என சட்டம் உள்ளது. பல நிறுவனங்கள் ஆங்கிலத்தில் பெரிதாக வைத்து, தமிழில் சிறிதாக எழுதி உள்ளனர். சிலர் பெயர் எழுதுவதில்லை. காலக்கெடு கொடுத்து, தமிழில் பெயர் எழுதாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சர் சாமிநாதன்: வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம். தொழிலாளர் நலத் துறை இதை செயல்படுத்துகிறது. வியாபாரிகளும் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.

தமிழில் பெயர் பலகை இல்லாவிட்டால், 50 ரூபாய் அபராதம் என்பது 2,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும், சட்டத்தின் அடிப்படையை விட, மன ரீதியாக மாற்றத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகிறோம். விரைவில் அந்த நிலைமை வரும்.

கொ.ம.தே.க., - ஈஸ்வரன்: சுதந்திரப் பேராாட்ட தியாகி ஓமந்துாரார் ராமசாமி ரெட்டியாருக்கு, அவரது பெயரில் சென்னையில் உள்ள அரசினர் தோட்டத்தில் முழு உருவச்சிலை அமைக்க வேண்டும்.

அமைச்சர் சாமிநாதன்: முதல்வருடன் கலந்து பேசி, நிதி நிலைக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

காங்., - தாரகை கத்பெட்: குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்ததை நினைவுகூரும் வகையில், களியக்காவிளையில் நினைவு வளைவு திறக்க வேண்டும்.

அமைச்சர் சாமிநாதன்: இந்த ஆண்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில், பொன்னப்ப நாடாருக்கு சிலை அமைக்க, முதல்வர் அனுமதி கொடுத்துள்ளார். உறுப்பினர் கோரிக்கை, முதல்வரின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு, எதிர்காலத்தில் பரிசீலிக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement