பா.ஜ.,வுடன் நீங்கள் சேரலாமா: முதல்வர்; சிறை வைத்த காங்.,குடன் சேர்ந்தது ஏன்: பழனிசாமி

சென்னை : “முதல்வர் ஸ்டாலினை மிசாவில் சிறையில் அடைத்த கட்சியுடன், தி.மு.க., கூட்டணி சேரும்போது, பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி சேருவதில் தவறில்லை,” என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேசினார்.

சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்:

அ.தி.மு.க., - கோவிந்தசாமி: ஊட்டியில் ஒரு வாரத்திற்கு முன், மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையை, முதல்வர் திறந்து வைத்தார். அ.தி.மு.க., ஆட்சியில் தான் இதற்கு அனுமதி பெறப்பட்டது.

அமைச்சர் சுப்பிரமணியன்: அ.தி.மு.க., ஆட்சியில், 11 மருத்துவ கல்லுாரிகளுக்கு அனுமதி பெறப்பட்டது. ஆனால், 18 முதல் 20 சதவீத கட்டுமானப் பணிகள் நடந்தபோது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தி.மு.க., ஆட்சியில் கட்டுமானம் செய்யப்பட்டு இந்த மருத்துவ கல்லுாரிகள், பிரதமர் மோடியால் 2022ல் திறந்து வைக்கப்பட்டன.

ஆனால், 6,500 படுக்கைகள் கொண்ட மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளுக்கு, 80 சதவீத நிதியை வழங்கியது பொதுப்பணி துறை தான்.

ஊட்டியில் கட்டாந்தரையாக இருந்த இடத்தில், நானும், பொதுப்பணித் துறை அமைச்சர் வேலுவும், பூஜை போட்டு வேலையை ஆரம்பித்தோம்.

அமைச்சர் வேலு 10 முறையும், நான் 20 முறையும் அங்கு சென்று பணிகளை கவனித்தோம். இப்போது, 700 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை, முதல்வரால் திறக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: நான்கு ஆண்டு தி.மு.க., ஆட்சியில், எத்தனை மருத்துவக் கல்லுாரிகள் கொண்டு வரப்பட்டுள்ளன? அ.தி.மு.க., ஆட்சியில், 11 மருத்துவக் கல்லுாரிகளுக்கு அனுமதி பெறப்பட்டது. அங்கு 50 சதவீதம் கட்டுமானம் நடந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதுதான் எதார்த்த உண்மை.

அமைச்சர் வேலு: ஊட்டியில் மருத்துவக் கல்லுாரியும், மருத்துவமனையும் அமைக்க, மலைப்பகுதியில் தனித்தனியே தேர்வு செய்யப்பட்ட இடங்கள் சரியில்லை. கட்டடம் கட்டினால், சரிந்து கொண்டே இருந்தது.

பொதுப்பணித் துறை மட்டுமின்றி, தனியார் பொறியாளரை அழைத்துச் சென்றும், ஆய்வு செய்தோம். சுற்றுச்சுவர் கட்டினால் தான் கட்டடம் கட்ட முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

அதன்படி மருத்துவக் கல்லுாரி கட்டடம் கட்டப்பட்டது. இன்னொரு மலையில் தரைதளம், முதல் தளத்துடன் மருத்துவமனை கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு, 80 சதவீத நிதியை, முதல்வர் தான் ஒதுக்கி தந்தார். இடம் தேர்வில் செய்த தவறுதான், காலதாமதத்திற்கு காரணம்.

அமைச்சர் சுப்பிரமணியன்: தமிழகத்தில், 36 அரசு மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. அதிக மருத்துவ கல்லுாரிகள் இருப்பதை காரணம் காட்டி, புதிய கல்லுாரிகளுக்கு அனுமதி தர, மத்திய அரசு தயக்கம் காட்டுகிறது.

பிரதமரை சந்திக்கும்போதெல்லாம், தென்காசி, மயிலாடுதுறை, பெரம்பலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில், ஆறு மருத்துவக் கல்லுாரிகளுக்கு அனுமதி தர வேண்டும் என, முதல்வர் வலியுறுத்தி வருகிறார்.

பழனிசாமி முதல்வராக இருந்தபோது உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கும், புதிய மருத்துவக் கல்லுாரிகள் கேட்கப்பட்டு உள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: நீலகிரி மக்கள், அறுவை சிகிச்சை செய்வதற்கு, கோவைக்கு செல்ல வேண்டும் என்ற நிலை இருந்தது.

இப்போது, அங்கேயே சிகிச்சை பெறும் நிலையை ஏற்படுத்தி இருக்கிறோம். நான்கு ஆண்டுகால தி.மு.க., ஆட்சியில், எத்தனை மருத்துவக் கல்லுாரிகள் கொண்டு வரப்பட்டன?

சபாநாயகர் அப்பாவு: மத்திய அரசிடம் கேட்டோம்; தரவில்லை என, அமைச்சர் விளக்கம் தந்துள்ளார்.

பழனிசாமி: இப்படி சாக்குப்போக்கு எல்லாம் சொல்லக் கூடாது; அரசு வாக்குறுதி கொடுத்தால், அதை நிறைவேற்ற வேண்டும்.

அமைச்சர் சிவசங்கர்: 'நீட்' தேர்வில் தமிழகத்திற்கு செய்த துரோகத்திற்கு பரிகாரமாகவே, 11 மருத்துவ கல்லுாரிகளுக்கு அனுமதி தரப்பட்டது.

நடிகர் வடிவேலு காமெடியை போல, 'பேக்கரி டீலிங்'படி மருத்துவக் கல்லுாரியை வைத்துக்கொள்ள சொல்லி விட்டனர்.

பழனிசாமி: மத்தியில் தி.மு.க., - காங்கிரஸ் ஆட்சியில் தான், நீட் தேர்வுக்கு அனுமதி தரப்பட்டது. அதைத் தடுத்து நிறுத்த, அ.தி.மு.க., முயற்சித்தது.

அமைச்சர் சிவசங்கர்: கருணாநிதி ஆட்சியில், நீட் தேர்வு நடக்கவில்லை. ஜெயலலிதா ஆட்சியிலும், நீட் தேர்வு அனுமதிக்கப்படவில்லை.

நீங்கள் அனுமதித்த காரணத்தால், 11 மருத்துவ கல்லுாரிகளுக்கு அனுமதி தரப்பட்டது. இதுதான் வரலாறு. மாற்றி மாற்றி பேசாதீர்கள். இது, 'பேக்கரி டீலிங்' தான்.

பழனிசாமி: இப்படி பிரச்னைக்குரிய தேர்வை கொண்டு வந்தது, காங்கிரஸ் - தி.மு.க., ஆட்சி. தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த வழக்கறிஞர், நீட் தேர்வுக்கு ஆதரவாக வாதாடினார். நீட் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டதாகவும் கூறினார். எல்லாம் செய்தது தி.மு.க., கூட்டணிதான்.

முதல்வர் ஸ்டாலின்: நீட் தேர்வு முறையை யார் கொண்டு வந்தது; யார் கொண்டு வந்த காரணத்தால் இவ்வளவு சிக்கல் வந்தது என்று, பழனிசாமி கேட்கிறார்.

அந்த சிக்கலை சரி செய்வதற்கு சரியான வாய்ப்பு, அவருக்கு இப்போது கிடைத்துள்ளது. நாங்கள் செய்தது தவறோ, தவறில்லையோ; நான் அந்த வாதத்திற்குள் செல்ல விரும்பவில்லை.

'இப்போது இருக்கக்கூடிய நீட் தேர்வு முறையை ரத்து செய்தால்தான், நாங்கள் கூட்டணியில் இருப்போம்; இல்லையென்றால் கூட்டணியை விட்டு விலகுவோம்' என்று சொல்வதற்கு, பழனிசாமிக்கு தகுதி இருக்கிறதா? இதுதான் என் கேள்வி.

பழனிசாமி: நீட் தேர்வு வழக்கில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்துள்ளது. தீர்ப்பை எதிர்த்து ஏதாவது செய்ய முடியுமா?

முதல்வர்: மத்திய அரசுக்கு எல்லாவித அதிகாரமும் இருக்கிறது. நீட் தேர்வு தேவையில்லை என்று வலியுறுத்த நீங்கள் தயாரா; அதுதான் என் கேள்வி.

பழனிசாமி: உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, உச்ச நீதிமன்றம்தான் சரிசெய்ய முடியும். உச்ச நீதிமன்றத்தை எதிர்த்து எப்படி செயல்பட முடியும்? நீட் தேர்வை ரத்து செய்வதாக, 2021 சட்டசபை தேர்தலில், நீங்கள் தான் வாக்குறுதி கொடுத்தீர்கள்.

முதல்வர்: உண்மைதான். மத்தியில் எங்களுடைய கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால், நிச்சயமாக வாக்குறுதியை நிறைவேற்றி இருப்போம்.

இப்போது, நீங்கள் கூட்டணி அமைத்திருக்கிறீர்களே, இந்த நிபந்தனையை விதித்து, அந்த கூட்டணியை தொடர அருகதை இருக்கிறதா என்பதுதான் என் கேள்வி.

பழனிசாமி: நீட் தேர்வை ரத்து செய்வதாகக் கூறி, சட்டசபை தேர்தலில் மக்களை ஏமாற்றி, நாங்கள் ஆட்சிக்கு வரவில்லை.

முதல்வர்: நாங்களும் ஏமாற்றி ஆட்சிக்கு வரவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன், 'பா.ஜ., கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம். 2026ல் மட்டுமல்ல; 2031ம் ஆண்டு கூட்டணியிலும் நாங்கள் சேர மாட்டோம்' என்று நீங்கள் கூறி விட்டு, இப்போது கூட்டணியில் சேர்ந்திருக்கிறீர்களே, யாரை ஏமாற்றுவதற்கு இந்த நாடகம்?

பழனிசாமி: ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் எப்படி வந்தது; ஹிந்திக்கு அனுமதி அளித்தது காங்கிரஸ். அப்போது அந்த கட்சியை எதிர்த்து போராடிய நீங்கள், அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்தீர்கள்.

கருணாநிதி நினைவிடத்தில், நீங்கள் 'மிசா' கைதியாக இருந்தது போல காட்சிப்படுத்தி இருக்கிறீர்கள்.

உங்களை சிறையில் அடைத்த காங்கிரஸ் கட்சியுடன், நீங்கள் கூட்டணி சேரும்போது, பா.ஜ.,வுடன் நாங்கள் கூட்டணி சேருவதில் தவறில்லை.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement