கோடையில் வீணாகி வரும் குடிநீர்கண்டு கொள்ளாத ஓசூர் மாநகராட்சி
ஓசூர்:ஓசூர், மீரா மகால் திருமண மண்டபம் எதிரே, பாலாஜி நகர் முதல் குறுக்கு தெருவில், பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் வகையில், 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதன் வளாகத்தில் இருந்து அவ்வப்போது தண்ணீர் வெளியேறி, அப்பகுதியிலுள்ள சாலையில் வழிந்தோடி வருகிறது. குடிநீர் தொட்டி உள்ள இடத்தில் பைப்லைன் சேதமாகி உள்ளதால், அடிக்கடி தண்ணீர் வெளியேறி வீணாகி வருவதாக, அப்பகுதி மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
கோடை காலம் என்பதால், மக்களின் குடிநீர் தேவை அதிகரித்துள்ளது. மாநகராட்சி பகுதியில் பல இடங்களில், 5 நாள் இடைவெயியில் தான், குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அப்படிப்பட்ட நிலையில், பாலாஜி நகரில் பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் மக்களுக்கு பயன்படாமல் வீணாகி வருகிறது.
மக்கள் கூறுவது போல், தொட்டி உள்ள பகுதியில், பைப்லைன் சேதமாகி இருந்தால், மாநகராட்சி நிர்வாகம் அலட்சியமாக இருக்காமல், உடனடியாக சீரமைக்க, கோரிக்கை எழுந்துள்ளது.