இடி மின்னலுடன் இன்று மழை பெய்யும்

சென்னை : 'வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களில், இன்று இடி மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


அதன் அறிக்கை:

தமிழகத்தில் நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரியில், 3 செ.மீ., மழை பெய்துள்ளது.


கோவை மாவட்டம் ஆழியாறு, துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், சுருளக்கோடு, பேச்சிப்பாறை, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதிகளில், தலா, 2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.


தமிழகத்தில், தென் மாவட்டங்களின் கடலோர பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் மீது, வளிமண்டல கீழடுக்கு பகுதியில், இருதிசை காற்று சந்திப்பு நிலவுகிறது.


இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று இடி மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும், 28ம் தேதி வரை, தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை தொடரும்.


அதேநேரத்தில், ஒரு சில இடங்களில், வரும், 26ம் தேதி வரை, அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாகும். இதனால், வெப்பம் அதிகரிப்பு, காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பு காரணமாக, வெளியில் செல்வோருக்கு அசவுகரியம் ஏற்படும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும், பகலில் அதிகபட்ச வெப்ப நிலை, 37 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாகும்.


நேற்று மாலை நிலவரப்படி, ஈரோடு, கரூர் பரமத்தி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய நான்கு நகரங்களில் 102 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 39 டிகிரி செல்ஷியஸ் வெயில் வாட்டியது. இதற்கு அடுத்தபடியாக, தர்மபுரி, சேலம், திருச்சி, திருத்தணி, வேலுார் நகரங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெப்பம் பதிவானது.

Advertisement