ஆங்கர் செய்தி சொர்ணவாரியில் தரிசாக போடப்படும் 20,000 ஏக்கர் விளைநிலங்கள் சாகுபடி பரப்பை அதிகரிக்க ஆய்வுகள் அவசியம்

பொன்னேரி, ஏப். 18-

பாசன வசதி இல்லாமல், மீஞ்சூர் ஒன்றியத்தில், சொர்ணவாரி பருவத்தின்போது, 20,000 ஏக்கர் பரப்பு விவசாய நிலங்கள் பயிரிடப்படாமல் தரிசாக போடப்படுவதால், நீர்நிலைகளை துார்வாரி, மழைநீரை முழுமையாக சேமித்து, சாகுபடி பரப்பை அதிகரிக்க உரிய ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் சம்பா, சொர்ணவாரி, நவரை பருவங்களில், ஆண்டுக்கு 2.47 லட்சம் ஏக்கர் பரப்பில் நெல் பயிரிடப்படுகிறது.

இதில் அதிகப்படியாக, மீஞ்சூர் ஒன்றியத்தில் சம்பா பருவத்தில், 35,000 ஏக்கரும், சொர்ணவாரி பருவத்தில், 15,000 ஏக்கரும் பயிரிடப்படுகிறது. நவரை பருத்தில் கோடைக்கால பயிர்களான பச்சைப்பயறு, தர்ப்பூசணி, எள் உள்ளிட்டவை, 10,000 ஏக்கரில் பயிரிடப்படுகின்றன.

இந்நிலையில், சொர்ணவாரி பருவத்தில், மீஞ்சூர் ஒன்றியதில், 20,000 ஏக்கர் விவசாய நிலங்கள் உரிய பாசன வசதி இல்லாமல் தரிசாக போடப்படுகிறது.

காட்டூர், திருப்பாலைவனம், கோளூர், மீஞ்சூர் ஆகிய நான்கு குறுவட்டங்களில் உள்ள, 70க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் உவர்ப்பு தன்மை கொண்டதாக இருக்கிறது. இப்பகுதிகளில், ஆழ்துளை மோட்டார்களில் இருந்து கிடைக்கும் தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது.

ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் வடகிழக்கு பருவமழையை நம்பி, அக்டோபர் - ஜனவரி மாதத்தில் சம்பா பருவத்தின்போது நெல் பயிரிடப்படுகிறது.

கிராமங்களில் உள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் தேங்கும் தண்ணீர் கோடைக்கு முன்னரே வறண்டு விடுகின்றன. இதனால், ஏப்ரல் - ஆகஸ்ட் மாதங்களில், சொர்ணவாரி பருவத்திற்கு விவசாயம் செய்ய முடியாமல், கிராமங்களில் விளைநிலங்கள் தரிசாக போடப்படுகின்றன.

மேற்கண்ட குறுவட்டங்களில் உள்ள கிராமங்களில் விவசாயிகள், ஆண்டுக்கு ஒருமுறை சம்பா பருவத்தின்போது மழையை நம்பியே விவசாயம் செய்து, அதிலிருந்து கிடைக்கும் வருவாயே ஆண்டு முழுவதிற்குமான வாழ்வாதாரமாக இருக்கிறது.

ஏரிகளை துார்வார அரசு ஒதுக்கும் நிதி, உரிய முறையில் பயன்படுத்துவதில்லை. கண்துடைப்பிற்காக கரைகள் மீதுள்ள செடி, கொடிகளை அகற்றி சுத்தம் செய்கின்றனர். ஏரியை ஆழப்படுத்தி மழைநீரை தேக்கி வைப்பதற்கும், ஏரிக்கு மழைநீரை கொண்டு வரும் வரத்து கால்வாய்களை பராமரிப்பதிலும் கவனம் செலுத்துவதில்லை.

கண்துடைப்பிற்காக மேற்கொள்ளப்படும் இதுபோன்ற பணிகளால், நெல் பயிரிடப்படும் பரப்பு குறைந்து, வருவதாக விவசாயிகள் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.

மூன்றில் இருந்து ஒன்றானது

இருபது ஆண்டுகளுக்கு முன், நவரை, சொர்ணவாரி, சம்பா என, மூன்று பருவங்களிலும் நெல் பயிரிட்டோம். பாசன வசதி இல்லாமல் படிப்படியாக இரண்டு பருவமாக மாறியது. தற்போது, ஒரே பருவம், மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்யும் நிலைக்கு ஆளாகி உள்ளோம்.

ஒவ்வொரு கிராமத்திலும் ஏரி, குளங்கள் உள்ளன. வேளாண்மைக்கு உதவும் மழைநீரை சேமித்து வைப்பதற்கான நீண்டகால திட்டமிடல்கள் இல்லை. நெல் பயிரிடும் பரப்பளவு குறைந்து வருவது குறித்த எந்தவொரு ஆய்வுகளும் மேற்கொள்வதில்லை. அதற்கான தீர்வுகள் குறித்தும் நடவடிக்கை இல்லை. தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சி.ராமு,

தலைவர்,

விவசாயிகள் நலச்சங்கம்,

திருவள்ளூர்.

Advertisement