கல்வித்துறை ஒப்பந்த வாகனங்களுக்கு வாடகை 'தாராளம்': புதிதாக கொள்முதல் செய்யாத பின்னணி என்ன


மதுரை: கல்வித்துறையில் ஒப்பந்த வாகனங்களுக்கு ரூ. பல லட்சங்களில் வாடகை தாரைவார்க்கப்படுவதற்கு பதில் புதிய வாகனங்கள் கொள்முதல் செய்ய வேண்டும் என ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.
இத்துறையில் இயக்குநர், இணை இயக்குநர் முதல் மாவட்ட அலுவலகங்கள் வரை 200க்கும் மேற்பட்ட ஓட்டுநர் பணியிடங்களில் 100க்கும் உட்பட்ட இடங்களிலேயே நிரந்தர ஓட்டுநர்கள் உள்ளனர். மீதமுள்ள இடங்களில் ஓட்டுநர்கள் இல்லை; அரசு வாகனங்களும் இல்லை.

இத்துறையில் 2022ல் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு நடவடிக்கையில், இடைநிலை, தொடக்கக் கல்விக்கு உட்பட்ட 58 டி.இ.ஓ.,க்கள் அலுவலகங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன. இந்த அலுவலகங்களுக்கு இதுவரை புதிய வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மேலும் 13 க்கும் மேற்பட்ட டி.இ.ஓ., அலுவலக வாகனங்கள் காலாவதியாகி திரும்ப ஒப்படைக்கப்பட்டன. அதற்கு பதிலும் புதிய வாகனங்கள் ஒதுக்கவில்லை.

இதனால் பெரும்பாலான கல்வி அலுவலகங்களில் வாடகை ஒப்பந்த அடிப்படையில் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதற்காக மாதம் ஒரு வாகனத்திற்கு ரூ.35 ஆயிரம் வரை கல்வித்துறை வாடகையாக வழங்குகிறது. அதே நேரம் அலுவலகங்களுக்கு என அரசு வாகனங்கள் ஒதுக்கப்பட்டால், ஒரு வாகனத்திற்கு மாதம் ரூ.9 ஆயிரம் வரை தான் செலவாகும். ஆனாலும் தேவையான புதிய வாகனங்கள் கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் வாடகை ஒப்பந்த நடைமுறை மூலம் தனியாரிடமிருந்து கிடைக்கும் 'கமிஷனுக்காக' அதிகாரிகள் மவுனம் காப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

கல்வித்துறை வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது: புதிய வாகனங்கள் கொள்முதல் செய்ய நிதியில்லை என அதிகாரிகள் கைவிரிக்கின்றனர். ஆனால் தேர்வுத்துறை, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் (டி.ஆர்.பி.,) இதற்கான ஏராள நிதி ஆதாரங்கள் உள்ளன. புதிய வாகனங்கள் கொள்முதலில் பல நடைமுறைகளை பின்பற்ற வேண்டியுள்ளது. நிதித்துறை ஒப்புதல் பெறுவதும் குதிரைக்கொம்பாக உள்ளது. இந்த நடைமுறையை எளிதாக்க வேண்டும். புதிய கல்வி அலுவலகங்களுக்கு விரைவில் வாகனங்கள் கொள்முதல் செய்யவும், காலாவதி வாகனங்களுக்கு பதில் மாற்று வாகனங்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Advertisement