பாக்., வீரர்களுடன் கைகுலுக்க இந்திய வீரர்களுக்கு தடை

புதுடில்லி: அட்டாரி வாகா எல்லையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களுடன் கைகுலுக்க இந்திய எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவதைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான அனைத்து உறவுகளையும் மத்திய அரசு முறித்துக் கொண்டுள்ளது. அட்டாரி வாகா எல்லையையும் மூட உத்தரவிட்டுள்ள அரசு பாகிஸ்தானியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனக்கூறியுள்ளது.
இந்நிலையில், அட்டாரி வாகா எல்லையில் கடந்த 1959ம் ஆண்டு முதல் கொடியிறக்கும் நிகழ்வு தினமும் நடக்கும். அப்போது, இரு நாட்டு வீரர்களும் கைகுலுக்கி கொள்வார்கள்.
தற்போது, இதற்கு பிஎஸ்எப் தடை விதித்து உள்ளது. பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க வேண்டாம் எனக்கூறியுள்ள அந்த அமைப்பு, அங்குள்ள கதவுகளை மூடி வைக்க வேண்டும் எனத் தெரிவித்து உள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதிப்பாட்டையும், அமைதியும் ஆத்திரமூட்டும் நடவடிக்கையும் ஒரே நேரத்தில் நடக்க முடியாது என்ற இந்தியாவின் கொள்கையை எடுத்துரைப்பதாக தெரிவித்து உள்ளது.
இதனையடுத்து வாகா எல்லையில் கதவுகளை மூடியபடி கொடியிறக்கும் நிகழ்ச்சி நடந்தது. கைகுலுக்கும் நிகழ்வும் நடக்கவில்லை.



