விசாரணையின்றி ஒருவரை நீண்டகாலம் சிறையில் வைத்திருப்பது தவறு: கோர்ட்

புதுடில்லி : 'வழக்கு விசாரணை இன்றி ஒருவரை நீண்ட காலம் சிறையில் வைத்திருப்பது சரியில்லை' என தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வழங்கி நேற்று உத்தரவிட்டது.
உத்தர பிரதேசத்தில் போதைப் பொருள் ஒழிப்பு போலீசில் 2019ல் சிக்கிய ஒருவர் ஜாமின் கோரி கடந்த ஆண்டு மார்ச் மாதம் அலஹாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு, தள்ளுபடியானது.
இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், 'எவ்வித விசாரணையும் இன்றி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வைக்கப்பட்டுள்ளேன். என்னுடன் கைதானவர், வழக்கு விசாரணைக்கு ஆஜராவதில்லை என கூறி, எனக்கு ஜாமின் மறுக்கப்படுகிறது' என கூறி இருந்தார்.
அதை எதிர்த்து, அரசு தரப்பில் வாதிடும் போது, 'இவருடன் சேர்ந்து கைதானவர், ஜாமினில் வெளியே சென்ற பின், விசாரணைக்கு ஆஜராகாமல் உள்ளார். விசாரணை விரைவில் துவங்க உள்ளது. எனவே, இவரை ஜாமினில் விடக் கூடாது' என தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பி.ஆர்.கவாய் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் ஆகியோர், குற்றம்சாட்டப்பட்ட அந்த உ.பி., நபரை, ஜாமினில் விடுவித்து உத்தரவிட்டனர்.
மேலும் அவர்கள் உத்தரவிட்டதாவது:
வழக்கு விசாரணை ஏதுமின்றி நீண்ட காலம் சிறையில் ஒருவரை வைத்திருப்பது தவறு. அவருடன் கைதானவர், விசாரணைக்கு ஆஜராகாமல் இருக்கிறார் என்பதற்காக, இவரை பிடித்து வைத்திருக்கக் கூடாது. வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருப்பவரின் ஜாமின் உத்தரவை ரத்து செய்யும் அதிகாரம் அரசிடம் உள்ளது. எனவே, மனுதாரரை நீண்ட காலம் சிறையில் வைத்திருப்பது நியாயமானதல்ல. எனவே, அவருக்கு ஜாமின் அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.









மேலும்
-
மேட்டூர் அணை ஜூன் 12ல் திறப்பு; சட்டசபையில் துரைமுருகன் அறிவிப்பு
-
ஊட்டியில் துணைவேந்தர்கள் மாநாடு; 32 பேர் பங்கேற்பு!
-
கோவையில் சோகம்...! நீரில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 3 பேர் பரிதாப பலி
-
3,935 பணியிடத்துக்கு குரூப் 4 தேர்வு அறிவித்தது டி.என்.பி.எஸ்.சி.,
-
காஷ்மீர் சென்றார் ராணுவ தளபதி உபேந்திர திரிவேதி!
-
காஷ்மீரில் பயங்கரவாதியின் வீடு வெடிவைத்து தகர்ப்பு; ராணுவத்தினர் அதிரடி