முதல்வர் ஸ்டாலினிடம் ராஜ்யசபா சீட் கேட்டாரா வைகோ?

5

சென்னை : ராஜ்யசபா எம்.பி., பதவி தொடர்பாக, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேசிய தகவல் வெளியாகி உள்ளது.


கடந்த 2019, லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க., இடம்பெற்றது. தொகுதி பங்கீட்டில் ஈரோடு லோக்சபா தொகுதியும், வைகோவுக்கு ராஜ்யசபா எம்.பி., பதவியும் வழங்கப்பட்டது.


கடந்த 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், ம.தி.மு.க., முதன்மை செயலர் துரைக்கு, திருச்சி லோக்சபா தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டது. கூட்டணிக்கான ஒப்பந்தத்தில், ராஜ்யசபா 'சீட்' மீண்டும் வைகோவுக்கு வழங்குவது குறித்து, எந்த உத்தரவாதமும் வழங்கப்படவில்லை.


வரும் ஜூலை மாதத்தில் நடக்கும் ராஜ்யசபா தேர்தலில், தி.மு.க.,வுக்கு 4 எம்.பி.,க்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அதில், ம.நீ.ம., கட்சி தலைவர் கமலுக்கு ஒரு பதவி தரப்பட உள்ளது.


சமீபத்தில் சென்னையில் நடந்த ம.தி.மு.க., நிர்வாகக் குழு கூட்டத்தில் பேசிய வைகோ, 'தனக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கவில்லை என்றாலும், கட்சி தொண்டர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்; யாரும் கோபப்படக்கூடாது' என்றார்.


இந்நிலையில், சென்னை அறிவாலயத்தில், முதல்வர் ஸ்டாலினை நேற்று முன்தினம் இரவு, வைகோ சந்தித்து, 20 நிமிடங்கள் பேசினார். அப்போது, ராஜ்யசபா 'சீட்' பற்றியே, முதல்வரிடம் வைகோ பேசியதாகக் கூறப்படுகிறது.


ஆனால், 'கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் ஆலோசித்து, நல்ல தகவல் சொல்கிறேன்' என ஸ்டாலின் சொல்லி இருப்பதால், ம.தி.மு.க., தரப்பு அப்செட் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement