கிரிக்கெட் அணி பயிற்சியாளர் கம்பீருக்கு கொலை மிரட்டல்

புதுடில்லி : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும், முன்னாள் எம்.பி.,யுமான கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதும், பா.ஜ.,வில் சேர்ந்தார். அக்கட்சி சார்பில் 2019ல் லோக்சபா தேர்தலில் டில்லியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி., ஆனார். அடுத்த தேர்தலில் அவருக்கு சீட் வழங்காததை அடுத்து, அரசியலில் இருந்து விலகி கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், கவுதம் கம்பீருக்கு, இ - மெயில் வாயிலாக நேற்று முன்தினம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ்., காஷ்மீர் என்ற பெயரில் வந்துள்ள கடிதத்தில், 'நான் உன்னை கொல்வேன்' என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காலை மற்றும் மாலை என இருவேளை மிரட்டல் கடிதம் வந்தது குறித்து டில்லி போலீசில் கவுதம் கம்பீர் புகாரளித்தார்.
அதில், 'கொலை மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கும், என் குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்' என, அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அதன்படி, போலீசார் விசாரணையை துவக்கிஉள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் சமீபத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டதற்கு இரங்கல் தெரிவித்து, தன் சமூக வலைதள பக்கத்தில் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்திருந்தார்.
அதில், 'கொடூர தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள், நிச்சயம் அதற்கான விலையை கொடுத்தே ஆக வேண்டும். இந்தியா பதிலடி கொடுக்கும்' என, தெரிவித்திருந்தார். இதையடுத்து, அவருக்கு இந்த கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும்
-
மேட்டூர் அணை ஜூன் 12ல் திறப்பு; சட்டசபையில் துரைமுருகன் அறிவிப்பு
-
ஊட்டியில் துணைவேந்தர்கள் மாநாடு; 32 பேர் பங்கேற்பு!
-
கோவையில் சோகம்...! நீரில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 3 பேர் பரிதாப பலி
-
3,935 பணியிடத்துக்கு குரூப் 4 தேர்வு அறிவித்தது டி.என்.பி.எஸ்.சி.,
-
காஷ்மீர் சென்றார் ராணுவ தளபதி உபேந்திர திரிவேதி!
-
காஷ்மீரில் பயங்கரவாதியின் வீடு வெடிவைத்து தகர்ப்பு; ராணுவத்தினர் அதிரடி