பகுதி நேர ஆசிரியர்கள் அமைச்சர் பதிலால் ஆறுதல்

திருப்பூர்; தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் அறிக்கை; சட்டசபையில் பள்ளிக்கல்வி மானிய கோரிக்கையின் போது, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் பதில் அளிக்கையில், 'பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து, தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தோம்; அதனை மறுக்கவில்லை. பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்குவது குறித்து முதல்வர் சரியான முடிவெடுப்பார்,' என தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, பகுதி நேர ஆசிரியர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.

கடந்த, 14 ஆண்டாக, 12 ஆயிரம் பேர் பகுதி நேர ஆசிரியர்களாக உடற்கல்வி, ஓவியம், கம்ப்யூட்டர், தையல், இசை உள்ளிட்ட பாடங்களில் பணிபுரிகின்றனர். இன்றைய விலைவாசி உயர்வில் தற்போது வழங்கப்படும், 12 ஆயிரத்து 500 ரூபாய் சம்பளத்தை வைத்து, குடும்பம் நடத்த முடியாது. மே மாதம் சம்பளம், அரசு சலுகைகள் என எதுவும் இல்லாமல் பணிபுரிவதால், வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.

பணி நிரந்தரம் செய்து, காலமுறை சம்பளம் வழங்கப்பட்டால் மட்டுமே, எஞ்சிய காலத்தை நிம்மதியாக நகர்த்த முடியும். இந்த சிரமங்களை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று வருகிறோம். எனவே, இந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே, 110 விதியில் பகுதி நேர ஆசிரியர் பணி நிரந்தர அறிவிப்பை வெளியிட வேண்டும்.

Advertisement