மளிகைக்கடை உரிமையாளரிடம் ரூ.2.62 லட்சம் நுாதன மோசடி

திருப்பூர்; கடன் வாங்கி தருவதாக மளிகை கடைக்காரரிடம், 2.62 லட்சம் ரூபாயை வாலிபர் ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டார்.

திருப்பூர், பெரிச்சிபாளையத்தை சேர்ந்தவர், 35 வயதுக்கு நபர். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த பிப்., மாதம் வந்த வாலிபர் ஒருவர், தன்னை ஸ்ரீகாந்த் கார்த்திக் என அறிமுகம் செய்தார். 'போன்பே' நிறுவனத்தில் இருந்து தங்களுக்கு கடனுதவி அளிக்கப்படுவதாக கூறி நம்ப வைத்தார். தொடர்ந்து, பான் கார்டு, வங்கி விபரங்களை பெற்று, தனியார் கடன் செயலி மூலம் 2.85 லட்சம் ரூபாய் கடனாக பெற்றார். இந்த பணத்தை பயன் படுத்தி அடகு வைத்த நகைகளை மளிகை கடைக்காரர் மீட்டார்.

மறுநாள் கடைக்கு சென்ற வாலிபர், இந்த கடன் செயலியில் கூடுதல் வட்டி இருப்பதாகவும், தங்களுக்கு வேறு செயலி மூலம் கடன் பெற்று தருவதாகவும் கூறினார். இதை நம்பி மீண்டும் நகைகளை அடகு வைத்த மளிகை கடைக்காரர், கடனை அடைக்க, வங்கி கணக்கில், 2.62 லட்சம் ரூபாயை டெபாசிட் செய்து வைத்தார். அங்கு வந்த வாலிபர் கடனை அடைப்பதாக கூறி, அந்த பணத்தை பல்வேறு வங்கி கணக்குக்கு அனுப்பி விட்டு கிளம்பி சென்றார்.

அவர் சென்ற பின், மளிகை கடைக்காரர் வங்கி கணக்கை சோதனை செய்தபோது, கடன் பெற்று தருவதாக கூறி, பணத்தை வேறு கணக்குகளுக்கு அனுப்பி மோசடி செய்தது தெரிந்தது. திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement