பாகிஸ்தானியர்களை உடனடியாக வெளியேற்றுங்கள்!: மாநில முதல்வர்களுக்கு அமித் ஷா உத்தரவு

புதுடில்லி: ''பாகிஸ்தானியர்கள் யாரேனும் உங்கள் மாநில எல்லைக்குள் இருந்தால், அவர்களை அடையாளம் கண்டு உடனடியாக வெளியேற்றுங்கள்,'' என அனைத்து மாநில முதல்வர்களுக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று உத்தரவிட்டார்.

ஜம்மு - -காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் சுற்றுலா தலத்தில், பாக்., பயங்கரவாதிகள் சமீபத்தில் நடத்திய தாக்குதலில், சுற்றுலா பயணியர் 26 பேர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, பிரதமர் மோடி தலைமையில் நடந்த பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பாகிஸ்தானுக்கு எதிராக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அறிவுறுத்தல்

பாகிஸ்தானுடன் எந்த நிமிடமும் போர் வெடிக்கும் அபாயம் சூழ்ந்துள்ள நிலையில், 1960ல் கையெழுத்தான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது.

அது தொடர்பான அதிகாரப்பூர்வ கடிதத்தையும் பாகிஸ்தானுக்கு நேற்று முன்தினம் அனுப்பி வைத்தது. மேலும், வாகா - -அட்டாரி எல்லையை மூடுவதாகவும், இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

நம் நாட்டின் எந்த ஒரு பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் இருந்தாலும், ஏப்., 27ம் தேதிக்குள், அதாவது நாளைக்குள் வெளியேற வேண்டும் என்றும் வெளியுறவுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், அனைத்து மாநில தலைமைச் செயலர்களுடன் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று நடத்தினார்.

இதில், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதோடு, தலைமைச் செயலர்களுக்கு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன. அந்த கூட்டம் முடிந்த சிறிது நேரத்திலேயே, அனைத்து மாநில முதல்வர்களையும் அமித் ஷா நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

ஆதாரம்

அப்போது, பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் பணிகளை உடனே துவங்க வேண்டும் என்றும், அந்தந்த மாநில எல்லைகளுக்குள் வசிக்கும் பாகிஸ்தானியர்களை அடையாளம் கண்டு, அவர்களை பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர்களுக்கு அமித் ஷா தெரிவித்தார்.

இதற்கிடையே, டில்லியில் உள்ள வெளிநாடுகளைச் சேர்ந்த துாதர்களை நம் வெளியுறவு அமைச்சகத்துக்கு வரவழைத்து, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து விவரிக்கப்பட்டது.

இதில், அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, சீனா உள்ளிட்ட 20 நாடுகளின் மூத்த துாதரக அதிகாரிகள் பங்கேற்றனர்.

அவர்களிடம், பஹல்காம் தாக்குதலை, பாகிஸ்தான் திட்டமிட்டு செயல்படுத்தியதற்கான ஆதாரங்கள், தங்களிடம் இருப்பதாக இந்தியா தெரிவித்தது.

மேலும், அவற்றை, 20 நாடுகளின் துாதர்களிடம் நம் வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி காண்பித்துள்ளார்.



ராணுவ தளபதி ஆய்வு

ஜம்மு - காஷ்மீரில் சமீபத்தில் நடந்த பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகான பாதுகாப்பு நிலைமை குறித்து, துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா நேற்று ஆய்வுக் கூட்டத்தை கூட்டினார்.இதில் ராணுவ தளபதி உபேந்திர திவேதி, துணை தளபதி பிரதீக் சர்மா உட்பட பல்வேறு ராணுவ உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். ஒரு மணி நேரம் இந்த கூட்டம் நடந்தது. தாக்குதலுக்குப் பின் ஜம்மு - காஷ்மீரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, கவர்னரிடம் அதிகாரிகள் விவரித்தனர்.அதன்பின் நடந்த கூட்டத்தில், துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா கூறியதாவது: பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளும், அவர்கள் எந்த இடத்தில் இருந்தாலும், எந்த அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், வேட்டையாடப்பட வேண்டும். நம் மக்களுக்கு எதிராக செய்த இந்த கோழைத்தனமான, கொடூரமான செயலுக்கு கடுமையான விலையை அவர்கள் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



எல்லையில் மோதல்

ஜம்மு - காஷ்மீரின் எல்லை கட்டுப்பாடு கோடு அருகே சில இடங்களில், பாகிஸ்தான் வீரர்கள் நேற்று அத்துமீறி அதிரடியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஹந்த்வாராவின் நவ்காம் செக்டாரில் பல இடங்களில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நம் வீரர்கள், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தனர். பாகிஸ்தானின் திடீர் அத்துமீறலை அடுத்து, எல்லையில் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. ராணுவ வீரர்கள் உஷார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எல்லையில் நடந்த இந்த மோதல், அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.



பயங்கரவாதி கொலை

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து ஜம்மு - காஷ்மீர் முழுதும் பயங்கரவாதிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. பந்திபோரா மாவட்டத்தில் உள்ள குல்னார் பாசிபோரா பகுதியில், நேற்று அதிகாலை பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்தனர். இந்த மோதலில், லஷ்கர் - இ - தொய்பா அமைப்பின் உயர்மட்ட தளபதி அல்தாப் லாலி கொல்லப்பட்டார். இவர், என்.ஐ.ஏ.,வால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹெஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் முன்னாள் தளபதி தாலிப் லாலியின் சகோதரர்.

Advertisement