அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை:இ - மெயிலில் வந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மற்றும் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை, அதன் இயக்குநர் மற்றும் முதல்வருக்கு, நேற்று காலை 11:35 மணியளவில், சமீர் அலிபுஹாரி என்பவரின் பெயரில், இ-மெயில் வந்தது.

அதில், 'ஜம்மு - காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்த ஜிஹாதிகளுக்கு ஆறு மாதங்களானது. உங்கள் மருத்துவமனையில் வெடிகுண்டு வைக்க, ஆறு நாட்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டது.

'சரியாக 2:30 மணியளவில் மருத்துவமனை வளாகத்தில் வெடிகுண்டு வெடிக்கும். ஆர்.டி.எக்ஸ்., மனித வெடிகுண்டும் தயாராக உள்ளது.

'அதே நேரத்தில், சென்னை ஆர்.ஏ.புரம் பசுமை வழிச்சாலையில் உள்ள, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பங்களாவிலும் வெடிகுண்டு வெடிக்க உள்ளது. அவர் மீது மனித வெடிகுண்டு தாக்குதலும் நடத்தப்பட உள்ளது' என, மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

அதில், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கின் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இ - மெயில் ஆங்கிலத்தில் குழப்பமான வாசகங்களுடன் இருந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன், பழனிசாமி வசிக்கும் அரசு பங்களாவில் சோதனை நடத்தினர்.

அவர் செல்லும் இடங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. சோதனையில் எவ்வித மர்ம பொருட்களும் சிக்கவில்லை. இதனால், புரளி என போலீசார் முடிவுக்கு வந்தனர்.

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக, ஜிப்மர் வளாகத்தில் இயங்கி வரும் மருத்துவக் கல்லுாரி, செவிலியர் கல்லுாரி, கேந்திரிய வித்யாலயாவில் உள்ள மாணவர்கள் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளின் உதவியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

மருத்துவமனை வளாகம் முழுதும் சோதனை நடத்தப்பட்டது.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து, சென்னை அபிராமபுரம் போலீசார் மற்றும் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement