முஜிபுர் ரஹ்மான் படம் கொண்ட ரூபாய் நோட்டுகள் நிறுத்தம்; நெருக்கடியில் வங்கதேசம்!

10


டாக்கா: ஷேக் முஜிபுர் ரஹ்மான் (முன்னாள் அதிபர்) படம் கொண்ட ரூபாய் நோட்டுகளை வெளியிடுவதை வங்கதேச மத்திய வங்கி நிறுத்தியதால், அந்நாட்டில் பண நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அண்டை நாடான வங்கதேசத்தில், அரசுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் தீவிரம் அடைந்தது. போராட்டம் கையை மீறி போனதை அடுத்து, அவாமி லீக் கட்சி தலைவர் ஷேக் ஹசீனா, பிரதமர் பதவியை ராஜினாமா செய்து நம் நாட்டில் தஞ்சம் புகுந்தார். முகமது யூனுஸ் தலைமையில், வங்கதேசத்தில் இடைக்கால அரசு பதவியேற்றது.


நாட்டில், ஹசீனாவின் எதிர்ப்பாளர்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளதால், பழையனவற்றை மாற்றும் வேலையை தீவிரமாக செய்கின்றனர். அவற்றில் ஒன்றாக, ரூபாய் நோட்டுகள், நாணயங்களில் மாற்றம் செய்யப்படுகிறது.

வங்கதேசத்தின் ரூபாய் நோட்டுகளில், முன்னாள் அதிபரும், ஷேக் ஹசீனாவின் தந்தையுமான மறைந்த ஷேக் முஜிபுர் ரஹ்மானின் படம் இடம் பெற்றுள்ளது. அதை நீக்கி விட்டு புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிட புதிய அரசு முடிவு செய்துள்ளது.


இதனால் ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் பழைய ரூபாய் நோட்டுக்கள் எப்போது வேண்டுமானாலும் செல்லாது என்று அறிவிக்க வாய்ப்புள்ளது. இதை கருத்தில் கொண்டு பழைய ரூபாய் நோட்டுகளை மக்கள் வாங்க மறுக்கின்றனர். இதனால் நாடு முழுவதும் பண நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தால் முஜிபுர் ரஹ்மான் படம் இடம்பெற்ற 15, ஆயிரம் கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் பயன்படுத்தப்படாமல் உள்ளன. இது குறித்து மத்திய வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஜியாவுதீன் அகமது கூறியதாவது: புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுகின்றன. இது ரொம்ப கடினமான விஷயம்.


பொதுமக்களின் துன்பத்தைப் போக்க அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை சந்தையில் புழக்கத்தில் விட வேண்டும். புதிய ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திற்கு வந்த பிறகு, பழைய ரூபாய் நோட்டுகள் படிப்படியாக திரும்பப் பெறப்பட வேண்டும். தேவைக்கு ஏற்ப வங்கதேச வங்கியால் புதிய நோட்டுகளை அச்சிட முடியவில்லை.


இவ்வாறு அவர் கூறினார்.


தற்போது புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணி துவங்கி உள்ளது. பணி முடிந்த பின்னர் வங்கிகள் மூலம், பயன்பாட்டிற்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement