திடீர் மழையால் வாழை, நெற்பயிர்கள் விளைச்சல் பாதிப்பு; குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்

விருதுநகர் : சீரற்ற வானிலை, திடீர் மழையால் திருச்சுழி பகுதிகளில் வாழை, நெற்பயிர்கள் விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விருதுநகரில் நடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் அளித்தனர்.
கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள், வேளாண் இணை இயக்குனர் விஜயா முன்னிலை வகித்தனர்.
அப்போது மார்ச் மாத விவசாயிகள் கூட்டத்தில் தமிழ்விவசாயிகள் சங்கத்தினர், விருதுநகர் ஆமத்துாரில் வண்டிப்பாதை, இரு நீர்வரத்து ஓடைகளை ஆக்கிரமித்துள்ளதை அகற்ற கோரி தர்ணா செய்ததின் நடவடிக்கையாக ஆக்கிரமிப்பு பற்றி விசாரணை நடத்தப்பட்டது.
ஆக்கிரமிப்பு விவகாரம் குறித்து வருவாய்த்துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இந்த விளக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயி ஒருவர், எல்லா பிரச்னைக்கும் நீதிமன்றம் தான் செல்ல வேண்டும் என்ற நிலைக்கு விவசாயிகளை தள்ளுவது நியாயமல்ல, என்றார். அப்போது இன்னொரு விவசாயி, அதெப்படி பட்டா நிலத்தில் பாதை தருவர் என கேட்க, இரு விவசாயிகள் இடையே கருத்து மோதல், கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து நடந்த கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:
ராஜேந்திரன், வெள்ளூர்: விருதுநகர் ஆமத்துார் அருகே வெள்ளூர் கண்மாயை துார்வார வேண்டும்.
பாலகணேசன், ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் அநேக கண்மாய்களின் நீராதாரமாக விளங்கும் பேயனாறு ஓடையை துார்வார வேண்டும்.
ராமச்சந்திரன், ராஜபாளையம்: விவசாய அடையாள அட்டை காலநீட்டிப்பு செய்தது நல்ல விஷயம். வெளியூரில் உள்ள விருதுநகர் மாவட்ட விவசாயிகளுக்கு இன்னும் தகவல் சென்றடையாமல் உள்ளது. அதற்கு நடவடிக்கை எடுத்தால் பயனாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்.
பஞ்சவர்ணம் மாம்பழத்திற்கு புவிசார் குறியீடு பெற்றுத்தர தோட்டக்கலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கர்ணன், ஸ்ரீவில்லிபுத்துார்: வைத்தியநாதசுவாமி கோயில் நிர்வாகத்திற்கு ராணிமங்கம்மாள், திருமலை நாயக்கர் தானமாக வழங்கிய 620 ஏக்கர் நிலத்தில் 300 ஏக்கர் மட்டும் தான் விவசாயத்திற்கு பயன்படுகிறது. மீதமுள்ள 320 ஏக்கர் என்ன ஆனது என தெரியவில்லை.
சமரசம், ஸ்ரீவில்லிபுத்துார்: பருவநிலை மாற்றத்தால் உதிர்ந்த மா பூக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
செல்வம்: திருச்சுழி: செங்குளம் பெரிய கண்மாயின் 7 மடைகளை துார்வார வேண்டும்.
ராமமூர்த்தி, ஸ்ரீவில்லிபுத்துார்: ராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்துார் ரோட்டில் தொட்டியபட்டி குப்பை கிடங்கில் குப்பைகளை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது.
விஜயமுருகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்: தென்னையில் வெள்ளை ஈ தாக்கம் அதிகளவில் காணப்படுகிறது. இது நாளடைவில் தென்னை விவசாயத்தை கேள்விக்குறியாக்கும்.
தமிழ்செல்வன், சாத்துார்: வெங்கடாசலபுரத்தில் உலர்களம் வேண்டும்.
கோபாலகிருஷ்ணன், நரிக்குடி: திருச்சுழி, நரிக்குடி நேரடி நெல்விதைப்பு நடக்கும் பகுதி. ஆவணி மழையில் நன்றாக பெய்தது அதற்கு பின் மழையில்லாமல் பருவநிலை மாற்றத்தால் நெற்பயிர் விவசாயம் பாழானது.
நரிக்குடியில் கணக்கெடுக்க கூறிவிட்டனர். திருச்சுழி, காரியாபட்டியிலும் மழை குறைவு தான் அங்கேயும் கணக்கெடுக்க வேண்டும்.
நிறைகுளம், ஸ்ரீவில்லிபுத்துார்: பொன்னாங்கண்ணி கண்மாயில் ஆக்கிரமிப்பு உள்ளது. அகற்ற வேண்டும்.
ஞானகுரு, ஸ்ரீவில்லிபுத்துார்: மம்சாபுரம் - செண்பகத்தோப்பு ரோடு போட்டு தர வேண்டும்.
லெட்சுமணப்பெருமாள், திருச்சுழி: திருச்சுழி வடபாலையில் 350 வாழை மரங்கள் மின்னல், மழையில் சேதமாகிவிட்டன. நிவாரணம் வேண்டும்.
தேவபிரியம், ராஜபாளையம்: யானைக்கோரை எனும் புதிய நீர்த்தாவரம் நீர்நிலைகளை பாழ்ப்படுத்தி வருகிறது. மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.
மேலும்
-
பாக்., வான்வெளி மூடல்; விரைவில் தீர்வு காண்போம்: மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு
-
மீண்டும் சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தணும்; பரூக் அப்துல்லா ஆவேசம்
-
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்
-
செந்தில்பாலாஜியின் ஜாமின் ரத்து செய்யக் கோரிய வழக்கு: முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!
-
தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து