ஆரம்ப சுகாதார நிலையத்தில் மலேரியா விழிப்புணர்வு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மலேரியா காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

வட்டார மருத்துவ அலுவலர் பாலதண்டாயுதபாணி தலைமை தாங்கினார். இளநிலை பூச்சியியல் உதவியாளர் சரவணன் முன்னிலை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பூச்சியியல் வல்லுநர் சுப்பிரமணியன் பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

'அனாபிலஸ்' என்ற பெண் கொசு மூலம் மலேரியா காய்ச்சல் பரவுகிறது. வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்வதன் மூலம் மலேரியாவை கட்டுப்படுத்த முடியும்.

தண்ணீர் உபயோகிக்கும் சிமெண்ட் தொட்டி, பிளாஸ்டிக் டிரம், பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும்.

உபயோகமில்லாத உரல், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் டயர்களை அப்புறப்படுத்த வேண்டும். காய்ச்சல் ஏற்பட்டதும் மருந்தகம் செல்லாமல், அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து, சிகிச்சை பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, மலேரியா காய்ச்சல் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள் விக்னேஷ்வரன், வசந்தன், மருந்தாளுநர் சுதா, விஜயராணி, நகராட்சி களப்பணியாளர் மகேஸ்வரி, புஷ்பராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement